ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் ஒடுக்குமுறைக்கு மத்தியில், ஜேர்மனி தனது குடிமக்களை உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், ஈரானில் ஜேர்மன் மக்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானிய மற்றும் ஜேர்மன் குடியுரிமை கொண்ட இரட்டை குடிமக்கள் ஆபத்தில் உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமீப காலங்களில், வெளிநாட்டு பிரஜைகளின் தன்னிச்சையான கைதுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன என்று அறிக்கை குறிப்பிட்டது.
ஏனெனில் ஈரானில் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஜேர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், ஜேர்மன்-ஈரானிய உறவுகள் சமீபத்திய வாரங்களில் மோசமடைந்துள்ளன. இதன் காரணமாகவே ஜேர்மனி அதன் குடிமக்களுக்கு இத்தகை எச்சரிக்கை அழைப்பை விடுத்துள்ளது.
இஸ்லாமிய ஆடைக் குறியீட்டை மீறியதாகக் கூறி நாட்டின் அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து ஈரானில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மக்களின் போராட்டங்களை அடக்குவதில் ஈரானின் புரட்சிகர காவலர்களை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திட்டமிட்டுள்ளது.