உயிரிழந்த ஆத்மாக்களின் சாபத்தினாலேயே நாடு குப்புறக் கவிழ்ந்தது!

You are currently viewing உயிரிழந்த ஆத்மாக்களின் சாபத்தினாலேயே நாடு குப்புறக் கவிழ்ந்தது!

 

இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ள துயிலுமில்ல காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரமாக மாவீரர் வார நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. மாவீரர் வாரத்தின் இறுதி நாளான 27 ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுவதிலும் தமிழ் மக்கள் தங்களது எதிர்காலத்துக்காக உயிர்த்தியாகம் செய்த உறவுகளை நினைவு கூர்ந்து வந்திருந்தனர்.

தாங்களாகவே தங்களது சொந்த செலவில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் – சிறிலங்கா அரசின் இனவாத போக்கால் அனைத்து துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல்களைத் தடைசெய்யவதற்காக – பொலிசார் நீதிமன்றங்களை நாடும் முயற்சிகள் நடைபெற்றிருந்தன.

நீதிமன்றங்கள் தடைகளை வழங்கியிருந்தாலும், பின்னர் எங்களது நியாயங்களை பதிவு செய்து அந்தத் தடையை நீக்க நாங்கள் கோரியிருந்த நிலையில், வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை நினைவுகூராமல் நினைவேந்தலை செய்யமுடியும் என்றே தீர்ப்புகளை வழங்கியிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை சம்பூரில் மட்டும் தான் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. அம்பாறையில் நினைவேந்தலை தடைசெய்யுமாறு கோரியிருந்த பொலிசாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் தடைசெய்யப்பட்ட அமைப்பையோ அடையாளங்களையோ நினைவு கூரக்கூடாது என்றே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அப்படியிருக்க , கிழக்கு மாகாணத்தில் முழுமையாக தடை வழங்கப்பட்டிராத போதும் பொலிசார் குறித்த நிகழ்வுகளை குழப்பும் வகையிலேயே செயற்பட்டிருந்தனர்.

பல இடங்களில் துயிலுமில்ல காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு படுமோசமாக அவமதிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்றிருந்தன.

அனைத்து துயிலுமில்லங்களிலும் இருந்த கல்லறைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தனியாரின் காணிகளில் தனியாருடைய அனுமதி பெற்று நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் கூட நினைவேந்தல்கள் செய்வதற்கு பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆகவே இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, இந்த அரசாங்கம் துயிலுமில்லங்கள் அமைந்திருந்த அரச காணிகள் அனைத்தையும் நினைவேந்தல் செய்வதற்குரிய காணிகளாக அங்கீகரித்து அதற்கென ஒதுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை நினைவேந்தல்கள் மூலம் மக்கள் தமது மரியாதைகளை செலுத்துவதற்குரிய வகையில் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ள துயிலுமில்ல காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும். நினைவேந்தல் உரிமையை அங்கீகரிப்பது நல்லிணக்கத்துக்கு மிக முக்கியமான விடயமாகும்.

இவ்விடயம் நிலைமாறுகால நீதி பொறிமுறையின் ஐந்தாவது தூணுமாகும். நினைவுகூருகின்ற துயிலுமில்லங்களை அழிப்பதோ, அல்லது நினைவேந்தல்களைத் தடைசெய்வதோ மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றமாகும்.

ஆகவே இது தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. போர் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஜே.வி.பி.க்கு அவர்களுடைய ஆயுதப் போராட்டம் முடிவடைந்து ஒருசில வருடங்களுக்குள்ளேயே அவர்களை நினைவு கூர அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தங்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர விடாமல் தமிழ் மக்களைத் தடுப்பது என்பது இனவாதத்தைத் தவிர வேறொன்றுமாக இருக்க முடியாது. ஜே.வி.பி. சிங்கள அமைப்பு என்பதற்காக அனுமதிக்கிறீர்கள். ஆனால் தமிழர்கள் என்ற வகையில் எமது நினைவேந்தல்களை திட்டமிட்டுத் தடுக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட பாரபட்சங்களை நீங்கள் நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

போர் முடிவடைந்த பின்னர் மிகச்சிறந்த நிலைக்கு செல்லவேண்டிய நாடு, இன்றைக்கு தலைகுப்புற விழுந்திருக்கிறதென்பது, உயிரிழந்த ஆத்மாக்களின் சாபங்களேயாகும். புத்த பெருமான் கூட வெட்கித் தலைகுனியக்கூடிய அளவுக்குத் தான் உங்கள் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இனவழிப்பை செய்தவர்களை காவலர்களாக சிங்கள மக்கள் கருதினார்கள். ஆனால் இன்று சிங்கள மக்களுக்கே துரோகம் அளித்தவர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்டனர். இனியாவது விளங்கிக்கொண்டு, உங்களின் மிக மோசமான இனவாதப் பாதையை விட்டு திருத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments