உயிரோடு மீட்கப்படுவார்களா! சுவீடன் நிபுணர் கருத்து!!

You are currently viewing உயிரோடு மீட்கப்படுவார்களா! சுவீடன் நிபுணர் கருத்து!!

“டைட்டான்” நீர்மூழ்கியில் சிக்கிக்கொண்ட ஐவரும் உயிரோடு மீட்க்கப்படக்கூடிய சாத்தியங்களில்லை என, சுவீடனை சேர்ந்த நீர்மூழ்கி வல்லுனரான “Bo Rask” கருத்துரைத்துள்ளார். நீர்மூழ்கிகள் தொடர்பான தனது அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, குறித்த சிறியரக நீர்மூழ்கி, கடலுக்கடியில் நீரமுக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் சிதைந்து போயிருக்க அதிக வாய்ப்புக்கள் உண்டெனவும், குறிப்பாக, நீரடி அமுக்கத்தின் காரணமாக இச்சிறிய நீர்மூழ்கி அதன் உட்பக்கமாக சிதைந்து சுருங்கிப்போயிருக்கும் எனவும், இதன் காரணமாக, உள்ளே சிக்கியிருந்த ஐவரும் நசுங்கி பலியாகியிருக்கலாமெனவும் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த “டைட்டான்” எனப்படும் சிறியரக நீர்மூழ்கி, உண்மையில் ஒரு நீர்மூழ்கிக்குரிய தராதரங்களை கொண்டிராத வெறும் கட்டுமானம் மாத்திரமே எனவும் கூறும் அவர், கடலடி பரிசோதனைகளுக்காக மாத்திரம் அமைக்கப்பட்ட இக்கட்டுமானத்தில் மனிதர்கள் பயணிக்கக்கூடிய எந்தவொரு அடிப்படை வசதிகளும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையெனவும் குறிப்பிடுவதோடு, இதனை நம்பி 3800 மீட்டர்கள் கடலுக்கடியில் சென்றமை மிகவும் முட்டாள் தனமானது எனவும் சாடியுள்ளார். குறித்த கட்டுமானமானது மிக உறுதியான உலோகத்தால் கட்டப்பட்டிருந்தாலும், 3800 மீட்டர்கள் ஆழத்துக்கு சொல்லுமளவுக்கு தகுதி வாய்ந்ததா என உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும், இக்கட்டுமானத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி சாளரங்கள், கடலடியில் நீரமுக்கத்தை தாங்காமல் வெடித்திருக்கக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கிறதெனவும் குறிப்பிடுகிறார்.

பெரும் பொருளாதாரம் படைத்தவர்கள், தங்களது மகிழ்ச்சிக்காக இவ்வாறான ஆபத்தான விடயங்களை கையிலெடுப்பதும், தங்களது உயிர்களை மட்டுமல்லாது, அடுத்தவர்களின் உயிர்களையும் ஆபத்தில் சிக்கவைத்துவிடுவதென்பது விசனத்துக்குரியதெனவும் மேற்படி சுவீடனை சேர்ந்த நீர்மூழ்கி வல்லுநர் கவலை தெரிவித்துள்ளார்.

தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கனேடிய விமானமொன்று, கடலடியில் இருந்து எழுந்ததாக சொல்லப்படும் ஒலி சமிக்ஞைகளை பதிவு செய்திருந்ததாகவும், இந்த ஒலிகள், காணாமற்போன நீர்மூழ்கியினுடையதாக இருக்கலாமென முன்னதாக வந்த செய்திபற்றி வினவப்பட்ட போது, அதை நிச்சயமாக சொல்ல முடியாதென கூறும் சுவீடன் நீர்மூழ்கி வல்லுநர், அந்த ஒலி சமிக்ஞைகள் அத்திலாந்திக் கடற்பகுதியில் இருக்கக்கூடிய எண்ணைக்கிணறுகளின் இயந்திரங்கள் எழுப்பிய ஒலியாகக்கூட இருக்கலாமெனவும், நீருக்கடியில் ஒலி மிக நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

குறித்த நீர்மூழ்கியின் முதன்மை மாலுமி “Paul-Henry Nargeolet”, மேற்படி நீர்மூழ்கியை இயக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான “Stockton Rush”, ஆகியோரோடு, இந்நீர்மூழ்கியில் பயணம் செய்து, கடலடியில் கிடக்கும் “டைட்டானிக்” கப்பலை நேரடியாக காணும் ஆவலில், ஆளுக்கு சுமார் 250.000 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக செலுத்தி பயணிகளாக அதில் பயணம் செய்த பெரும் செல்வந்தரான “Hamish Harding”, பாகிஸ்தானிய பின்னணியை கொண்ட செல்வந்த வர்த்தகரான “Shahzada Dawood” மற்றும் அவரது பத்தொன்பது வயதான மகன் “Sulaiman” ஆகியோரே கடலடியில் சிக்கியிருப்பவர்களாவர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments