சதுப்பு / களிமண் பிரதேசங்களில் அவ்வப்போது ஏற்படும் நிலச்சரிவுகள் நோர்வேயில் பல உயிர்களை காவு கொண்டுள்ளதோடு, பொருளாதார சேதங்களையும் ஏற்படுத்தி வந்துள்ளன.
குறிப்பாக, தற்போது அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதியான “Gjerdrum / Ask” பகுதி அமைந்துள்ள “Romerike” மாவட்டத்தில் அருகருகே அமைந்துள்ள பல இடங்களில் இவ்வாறான நிலச்சரிவுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பதிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றன.
1320
பதிவுகளின்படி, “Romerike” மாவட்டத்தில் 1320 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவே மிகப்பழமையானதாக கூறப்படுகிறது.
“Rotnes / Nes” என்ற இடத்தில் சுமார் 630 ஏக்கர் பரப்பளவு நிலம் இதில் காவு கொள்ளப்பட்டதாகவும், மக்கள் குடியிருப்பொன்று முற்றாக விழுங்கப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1400
1400 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில், “Nannestad / Kabberud” என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், விவசாயப்பண்ணையொன்று முற்றாக காவுகொள்ளப்பட்டது.
அதேபோல் 1400 ஆம் ஆண்டின் இன்னொரு காலப்பகுதியில், “Olstad / Gerdrum” என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 250 இலிருந்து 500 ஏக்கர்கள் நிலம் வரையில் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
1475
“Ullernsaker / Løken” என்ற இடத்தில், 1475 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 500 ஏக்கர்கள் நிலப்பகுதி பாதிக்கப்பட்டதாகவும், அங்கிருந்த, முழுக்க முழுக்க கற்களால் ஆன பண்டைக்காலத்து தேவாலயமொன்றும் மண்சரிவில் அடித்துச்செல்லப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1725
“Ullershov / Nes” என்ற இடத்தில், 20.09.1725 அன்று ஏற்பட்ட நிலச்சரிவின்போது, இரு விவசாயப்பண்ணைகள் முற்றாக காவு கொள்ளப்பட்டதோடு, 5 பேர் பலியாகியிருந்தனர் என பதிவிடப்பட்டுள்ளது.
1736
“Øvre Ramby / Ullensaker” என்ற இடத்தில், 19.11.1736 இல் நடைபெற்ற நிலச்சரிவில், சுமார் 60 ஏக்கர் நிலப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தது.
1768
“Skjea / Sørum” என்ற இடத்தில், 15.04.1768 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில், 16 பேர் பலியாகியிருந்ததோடு, பல குடியிருப்புக்களும், வளர்ப்பு மிருகங்களும் காவு கொள்ளப்பட்டிருந்தது. இதுவே மிக மோசமான உயிர்ப்பலிகளை கொண்ட நிலச்சரிவாக அடையாளப்படுத்தப்படுகிறது.
அதே ஆண்டில், அதே இடத்தில் மீண்டும் ஒரு நிலச்சரிவும் பதிவு செய்யப்பட்டது.
1794
“Løren / Sørum” என்ற இடத்தில் 1794 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், சுமார் 360 ஏக்கர் நிலம் காவுகொள்ளப்பட்டது. வழமையாக, அதீத மழை பொழிவின் போதோ அல்லது, பனிக்காலத்தின் போதோ ஏற்படக்கூடிய இவ்வாறான சதுப்பு / களிமண் சரிவுகள் இங்கு கடுமையான கோடை காலத்தில், அதாவது ஜூன், ஜூலை மாதப்பகுதிகளில் ஏற்ப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1795
“Tesen / Nes” என்ற இடத்தில் 17.10.1795 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில், சூழ இருந்த இடம் சுமார் 111 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும், நிலச்சரிவினால் அசைந்து சென்ற மண் காரணமாக, அருகிலிருந்த Mjøsa” என்ற பாரிய நீர்நிலை 8 மீட்டர்கள் உயர்ந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1883
“Holum / Ullernsaker” என்ற இடத்தில் 1883 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாள் இரவு நிகழ்ந்த இந்நிலச்சரிவு மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 200 மீட்டர் அகலமும், 300 மீட்டர் ஆழமும் கொண்ட அதல பாதாளமாக அவ்விடம் காணப்பட்டதாகவும், வீடுகள், தோட்டங்கள் என பெரும் நிலப்பரப்பை விழுங்கிக்கொண்ட இந்நிலச்சரிவின் போது, சுமார் ஒரு மில்லியன் கியூபிக் மீட்டர்கள் கொள்ளவான சதுப்பு / களிமண் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 உயிர்களை காவுகொண்ட இவ்வனர்த்தத்தில் பலியான 12 வயது சிறுமியொருவரின் உடல், சம்பவ இடத்துக்கு அருகிலிருக்கும் ஆறு ஒன்றிலிருந்து, அனர்த்தம் நடந்து ஒரு வருடத்தின் பின் மீட்கப்பட்டதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.
26.11.1883 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிக மோசமான இவ்வனர்த்தம் ஏற்பட்ட பகுதியான “Holum” என்ற இடம், தற்போது 30.12.2020 அன்று நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட “Gjerdrum / Ask” என்ற இடத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்திலேயே அமைந்துள்ளது!
1924
“Kankedalen / Gjerdrum” என்ற இடத்தில் 21.10.1924 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் 170 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டது.
இதுவும், கனமழை காரணமாகவே நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் “Ole Haugerud” என்ற ஒருவரே பலியானதாகவும், ஆனால், அவரது உடலம் கடைசிவரையிலும் மீட்கப்படவேயில்லை என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
அனர்த்தம் நடந்த இப்பகுதியும், தற்போதைய அனர்த்தப்பகுதியான “Gjerdrum / Ask” பகுதியிலிருந்து மிகச்சில கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1953
“Borgen / Ullensaker” என்ற இடத்தில் 22.12.1953 அன்று நள்ளிரவில் நடந்த நிலச்சரிவின்போது, முதல் நாளே நிலச்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவ்விடத்திலிருந்த விவசாயப்பண்ணையில் வசித்துவந்த குடும்பம் பாதுகாப்பாக வெளியேறியதாகவும், அடுத்த நாளே அங்கிருந்த விவசாயப்பண்ணை நிலச்சரிவில் காவு கொள்ளப்பட்டதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.
“சதுப்புநில / களிமண் நிலச்சரிவு” என்றால் என்னவென முதன்முதலில் சர்வதேச ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்ட சம்பவமாகவும் இது அடையாளப்படுத்தப்படுகிறது.
1954
“Ihlang / Nes” என்ற இடத்தில் 30.11.1954 அன்று நிகழ்ந்த நிலச்சரிவில், 12 ஏக்கர் காடு இழக்கப்பட்டதாகவும், தொடர்ந்து, 10.09.1965 அன்று நடைபெற்ற பாரிய நிலச்சரிவில், விவாசாயப்பண்ணை ஒன்று முழுவதுமாக அழிந்து போனதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1967
மிக மோசமான நிலச்சரிவுகள் வரிசையில் இறுதியாக, “Hekseberg / Gjerdrum” என்ற இடத்தில், 20.03.1967 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவுக்கான முன்கூட்டிய அறிகுறிகள் இரு நாட்களுக்கு முன்னதாகவே தென்பட்டதால், மனித உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டிருந்தன.
மிகப்பெரிய விளைநிலம், வீடுகள் என்பன இதில் காவு வாங்கப்பட்டன. தொடர்ந்து வந்த காலங்களில் இவ்விடத்தில் சிறியதும், பெரியதுமாக பல நிலச்சரிவுகள் ஏற்பட்டமை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்விடமும் தற்போதைய அனர்த்த இடமான “Gjerdrum / Ask” என்ற இடத்திலிருந்து குறுகிய தூரத்திலேயே அமைந்துள்ளது.
1978
29.04.1978 அன்று, “Rissa” என்ற இடத்தின் பெரும்பகுதி, நிலச்சரிவினால் அழிந்து போனது. இதில் ஒருவர் பலியானதோடு, 15 விவசாயப்பண்ணைகள், வீடுகள், மலைவாசத்தலங்கள் என்பன அழிந்து போயின.
இவ்வனர்த்தத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி:
2016
10.11.2016 ஆம் ஆண்டில் “Sørum” என்ற இடத்தில் ஒரு பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அவ்வேளையில் அவ்விடத்தில் காடழிப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த “லிதுவேனியா” நாட்டை சேர்ந்த 3 இளம் தொழிலாளர்கள் பலியாகியிருந்தார்கள் என்றும், இவர்களில் இருவரின் உடலங்கள் இன்றுவரை மீட்கப்படவில்லை என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அத்தனை நிலச்சரிவுகளும், “Romerike” என்ற ஒரே மாவட்டத்திலிருக்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்றிருக்கின்றன என்பதும், தற்போது அனர்த்தம் நிகழ்ந்துள்ள “Gjerdrum / Ask” என்ற இடமும் அதே “Romerike” மாவட்டத்த்திலேயே, ஏற்கெனவே அழிவுக்குள்ளான இடங்களுக்கு அருகாமையில் அமைந்திருப்பதும் கூர்ந்த கவனிக்கத்தக்கது.
நோர்வே புவியியல் ஆய்வு மையத்திடம் இருக்கும் பதிவுகளின்படி, 1200 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 62 நிலச்சரிவுகள் இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், நிலச்சரிவுக்கு உள்ளாகக்கூடியதான 500 ஆபத்தான இடங்கள் இம்மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்:
https://www.dagbladet.no/nyheter/dodsrasene—frykter-at-dette-bare-er-starten/73239594