உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் – முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலி சுமந்த முதல் நாள்
2009 மே 01 :-
தமிழீழம்
முள்ளிவாய்க்காலில் அடைபட்டுக்கிடந்த பொதுமக்கள் மீது ஆட்லறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள் கொண்டு பேரினவாத சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதில் மே முதலாம் திகதி முள்ளிவாய்க்கால் தீப்பிடித்து எரிந்தது
குறித்த நாள் முழுவதும் தமிழ் மக்கள் கோரமான தாக்குதல்களிற்கு உட்பட்டனர்.
அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் இயங்கிக்கொண்டிருந்த தற்காலிக மருத்துவமனைகளில் காயம் பட்ட மற்றும் இறந்த பொது மக்களால் நிரம்பி வழிந்தது. மருத்துமனை ஊழியர்களின் எண்ணிக்கையின் படி 110 ற்கு மேற்பட்ட பொது மக்கள் மாலை 4.30 வரை காயமடைந்தவர்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை அதற்கு முதன் நாளில் 27 பேர் காயமடைந்து குறித்த வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவ் கொடூர தாக்கல்களில் சிக்கி இறந்த பொதுமக்களின் உடல்கள் சில புதைக்கப்பட்டதுடன் ஏனையவை எரியூட்டப்பட்டன
முள்ளிவாய்க்கால் கிராமத்திற்கு வடக்கே உக்கிரமான போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததினால் மக்கள் மிகவும் நெரிசலாக இருந்த தெற்கு பக்கம் நோக்கி தங்கள் உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்ததை காண முடிந்தது.
நாள் முழுவதும் பதுங்கு குழிக்குள்ளேயே வாழ வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ப்பட்டதுடன் பதுங்கு குழிக்குள் துாங்கும் போதும் பலர் எறிகணைகளால் கொல்லப்பட்டனர்.
நன்றி-தாரகம்