உரத்துச் சொல்கிறேன் கனவுகளை விதைத்த என்நிலம் மீளும் – ஆதிலட்சுமி சிவகுமார்!

You are currently viewing உரத்துச் சொல்கிறேன் கனவுகளை விதைத்த என்நிலம் மீளும் – ஆதிலட்சுமி சிவகுமார்!

பெருவெளியின் கஞ்சிப்பாடல்.

மனதின் வெளியில்

வானமும் நீலமுமாக

விரிகிறது முள்ளிவாய்க்கால்.

அழுதவண்ணமிருந்த என்

ஆருயிர்க் குழந்தைகள்.

எனக்குள் தீராவலி தந்த

காயமுற்ற தேம்பல்கள்.

ஊசியின் முனையாக

உயிர் உறுஞ்சிய

நச்சுக் குண்டுகள்.

கந்தகத்தின் நெடியை

அள்ளிவந்த காற்று.

பசித்த மழலைகளுக்காய்

பதுங்குகுழி விட்டு

அழுக்குத்துணி போர்த்தி

மழலைகளோடு

மரக்குடையின் கீழே

நீண்டு விரிந்திருந்த

கஞ்சிக்கான பெரும்வரிசை.

கண்ணீர்த்துளிகள்

காயாத கன்னங்களோடு

காய்ந்த குழந்தைகள்.

கழன்று சுழலும் இலைகளாய்

வீழ்ந்த என்மனிதர்கள்.

நிலம் நடுங்கிய அந்த

நினைவுகளைத் தாங்கி

காய்ந்தும் கருகியும்

கண்மூடிப்போன நாட்கள்.

வாசல்களற்ற வானம்

விரிந்து பரந்தபோதும்

வெறுமையுற்றுத் துடித்த

காலத்தின் வடுக்கள்.

கொஞ்சம் அரிசி

நிறையத் தண்ணீர் எனக்

கொதித்தது

முள்ளிவாய்க்கால் கஞ்சி.

சுவையற்ற தெனினும்

பல்லுயிர் காத்தது.

தலைமுறை தோறும்

எம்மின அடையாளமாய்

தொடர்ந்து வருவது.

இயற்கை மழையாகிப்

பொழிந்த பொழுதுகளில்

கண்களில்வழியும்

உப்பின் சுவையை

உதடுகள் அருந்துமுன்

தொண்டையில் தைத்தது

துமுக்கியின் முனை.

செந்நிறமாகிய கஞ்சியை

சேர்த்து அணைத்தபடியே

விழுகிறது குஞ்சின் உடல்.

பெருமூச்செறிகிறது மனம்.

அலைகளை கரைநோக்கித்

தள்ளிச்செல்கிறது கடல்..

பெருமர நிழல்களில்

நிமிர்ந்து நின்ற புற்களிடமும்

சேற்றில் முட்டைகளைப்

புதைத்து அடைகாத்த

புட்களிடமும் சொல்லிவந்தேன்.

கறைபடிந்த கரங்களை

உலகம் ஓர்நாளில்

கழுவித்தான் ஆகவேண்டும்.

காலமென்பது சுழற்சியுடையது

அதன் வரவும் செலவும்

எங்கோ ஓரிடத்தில்

பதிவாகி இருக்கும்.

உயிர்களின் விலை

மதிப்பு மிகுந்தது

ஒளிரும் விண்மீன்களே

இந்தப் பெருவெளியில்

உரத்துச் சொல்கிறேன்

கனவுகளை விதைத்த

என்நிலம் மீளும்.

 – ஆதிலட்சுமி சிவகுமார்-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply