அடங்கா நினைவுகள்…

You are currently viewing அடங்கா நினைவுகள்…
ஈரேழு ஆண்டுகளை
காலமூச்சு காற்றோடு
கரைத்துக்கொண்டாலும்
இரத்தமும் சதையுமாக
உறவுகள் சிதைந்து
சின்னாபின்னமாகிய
சிதறல்களின் இரணம்
சிரத்தினை கசக்கி பிழிந்தபடியே
காலச்சக்கரம் உருண்டு
இருண்ட நினைவுகளை
இரை மீட்கிறது!
ஒன்றா இரண்டா
ஆண்டுத்துவசத்தை
முடித்து விட்டு
கடந்து போக
நீதிக்காக நிமிர்ந்த
தலைகளை
தறுதலைகள்
தறித்துப்போட்ட
வெறித்தனத்தை
இனமானமுள்ளவன்
எப்படி மறப்பான்!
2009
எங்களுக்கு
விடிந்திருக்கக்கூடாது
என்றுதான்
இப்போதும் மனம்
அங்கலாய்கிறது౹
தாகத்துக்கு
தண்ணீரின்றி
ஓடி வந்து
குடிசையில்
கடன் வாங்கி
குடித்தவரும்
தண்ணீர்
கொடுத்தவரும்
கூவிவந்த குண்டுகளில்
மாண்டுபோன
வலியும்
பிள்ளைக்கு பால்கொடுத்த கணங்களில்
கணைகள் வந்து
உயிர்களை பிடுங்கி
வீசிய கொடும்
துயரமும்
எப்படி
விழிப்படலங்களில்
அழிந்துபோகும்!
உளி செதுக்கிய
சிலையாய்
அழகாய் கட்டிய
நிழல் அரசின்
நினைவுகள்
எப்படி அகம்
கடந்து போகும்!
கந்தக புயலில்
சிக்குண்ட சின்னஞ்சிறிய
சிரிப்புகளின்
ஓசை ஒய்ந்து
மயானமாய்
கிடந்த காட்சிகளை
நன்றியுள்ள தமிழ்
இரத்தம் எப்படி
துடிக்காமல்
அடங்கும்!
வரிவரியாய்
தூரிகைகளோடு
ஓவியம் தீட்டிய
ஓவியரின்
காவிய கதைகளை
மீள நினைக்காது
எப்படி
வாழ நினைக்க முடியும்!
ஆதலால்
விடியலின் கருக்களாய்
விதைக்கப்பட்ட வீரியரின்
தூய நினைவுகளை
உனக்குள்
விதைத்துக்கொள்!
முளைகள் விடும்வரை
நீரை ஊற்றிக்கொள்!
நிச்சயம்
அடங்கா நினைவுகள்
கனவுகளின்
கதவைத் திறக்கும்!!
✍️தூயவன்
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments