நியூசிலாந்தில் 14வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு கூறப் பட்டது.
இந்த உணர்வு பூர்வமான நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக முதலில் பொது சுடரினை முதியோர் சங்கத்தின் தலைவி திருமதி மகாசிவம் அவர்கள் ஒளிர்வித்தார். அதனை தொடர்ந்து நியூசிலாந்து தேசிய கொடியானது நியூசிலாந்து தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் சுந்தராஐன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டதுடன் தமிழீழ தேசிய கொடியானது செயற்பாட்டாளர் காவியன் அவர்களால் அவர்களால் ஏற்றிவிக்கப்பட்டது.
ஈகைசுடரினை லெப் கேணல் குயிலனின் தாயார் அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர்நீத்த அனைவருக்காகவும் மலர் வணக்கமும் தீபஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழின அழிப்பு நாளினை தாங்கிய காணொளி காண்பிக்கப்பட்டது.
பின்னர் செல்வி சாருஜா சர்வேஸ்வரன் மற்றும் அவர்களால் ‘தாய்மண்ணை முத்தமிட வேண்டும்…..’ என்ற பாடலுக்கு வலிகளை உணர்வாக்கிய நடனம் இடம்பெற்றது.
பின்னர் தமிழின பேரவலத்தின் வலிகளை கேசிகா, குருபரன் மற்றும் ஹனன்யா ஆகியோர் தம் கவிதை வரிகளால் வர்ணித்திருந்தார்கள்.
அடுத்து முள்ளிவாய்க்கால் பேரவல நினைவாக ‘மண்ணே மண்ணே தமிழ் மண்ணே…..’ எனும் பாடலுக்கு செல்வி துவாரகா குருபரன் மற்றும் தமிழோசை குருபரன் ஆகியோரின் உணர்வு பூர்வமான நடனம் இடம்பெற்றது.
தொடர்ந்து ஆசிரியர் அருள்தாஸ் அவர்களின் உரை இடம்பெற்றது. தமிழின அழிப்பு என்பது இன்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல, அது பல தசாப்பதங்களாக நடைபெற்று வருகிறது என்பதினை மிகத்தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்துரைத்தார்.
பின்னர் மே மாத வலிகளை உலகுக்கு உணர்த்தும் விதமாக பகுரங்கா தமிழ் பாடசாலை மாணவர்களான கேசிகா, காவியா, தமிழரசி மற்றும் கேசினி ஆகியோரால் “மே என்ற பேய் வந்தது…” எனும் தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது.
பின்னர் 2009 பேரவலத்தின் போது காயங்கள் தாங்கிய எம்மக்களின் சீவனை காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு நினைவுகூறப்பட்டது.
பின்னர் நிகழ்வின் இறுதியாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு தயாகரன் அவர்கள் நியூசிலாந்து தேசிய கொடியினை இறக்கிவைத்தார். தமிழீழ தேசியக்கொடியினை செயற்பாட்டாளர் சர்வேஸ்வரன் அவர்கள் இறக்கி வைத்தார்.
முள்ளிவாய்க்கால் முடிந்து போன இனவழிப்பின் புதியதொரு வரலாற்றின் ஆழமாய் புதைந்த அத்தியாயம்.
இன்று 14 ஆம் ஆண்டு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இணைந்து கொட்டொலிகள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தை அடைந்து, அங்கே தமிழின அழிப்புக்கெதிரான மற்றும் எமது அரசியற்கோரிக்கைகளை கொட்டொலிகளாக எழுப்பிக்கொண்டே பிரித்தானிய பிரதமர் வதிவிடமான இல 10 Downing Street க்கு முன்பாக ஒன்று கூடினார்கள்.
தொடர்ந்து நினைவு நாள் நிகழ்வுகள் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வட கிழக்கு செயற்பாட்டாளர் அப்பன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
பிரித்தானிய தேசிய கொடியினை இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி பாபரா அவர்கள் ஏற்றிவைத்தார் . தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை ஈழ விடுதலைக்காக இறுதிவரை களத்தில் நின்ற இரு மாவீரர்களின் சகோதரர் கனி என்று அழைக்கப்படும் சுரேசு இரங்கசாமி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
இறுதிவரை முள்ளிவாய்க்கால் களமுனைவரை நின்று போராடிய சிறீஸ்காந்தன் என்று அழைக்கப்படும் அகிலரூபன் அவர்கள் ஈகை சுடரினை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்காக சுடர் வணக்கம் மற்றும் மலர் வணக்கம் இடம்பெற்றது.
பழமைவாத கட்சியின் Carshalton மற்றும் Wallington பகுதியின் பாரளுமன்ற உறுப்பினர் Hon. Elliot Colburn , Thurrock பகுதியின் பாரளுமன்ற உறுப்பினர் Hon. Jackie Doyle Price மற்றும் Chipping Barnet
பகுதியின் பாரளுமன்ற உறுப்பினர்
Rt. Hon. Theresa Villiers ஆகியோரின் உரையினை தொடர்ந்து பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியற்துறை பொறுப்பாளர் திரு நியூட்டன் எழுச்சி உரையினை ஆற்றினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார இறுதி நாள் நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் நேற்றைய தினம் (18-05-2023) நினைவு கூறப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அஞ்சலி நிகழ்வு மாணவர்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைசுடரேற்றி அகவணக்கம் செலுத்தியோடு மலரஞ்சலியும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.