புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக் கொண்டு ஒரு அரசாங்கமே செய்ய முடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மற்றும் செயற்பாட்டாளர்களை சென்று சந்தித்தனர்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அக்கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்தனர்.
மாவீரர் நினைவு தினத்தன்று மாவீரர் தினத்தை நடாத்துவதற்கு கொடி ஏற்றும் கம்பிகளை கொண்டுசென்ற வாகனத்தை பொலிஸார் கைப்பற்றிய நிலையில் அது தொடர்பில் அறிவதற்காக வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் அவரது மகன் ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் நிலைமைகள் தொடர்பிலும் அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் சட்ட செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.