27.11.1990 அன்று இரண்டாவது மாவீரர்நாளில் தமிழீழதேசியக்கொடியாக தமிழீழவிடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டது அதனைத்தொடர்ந்து தமிழினத்தின் எழுச்சியின் வடிவமாக தமிழினத்தின் அறத்தின் வடிவமாக தமிழினத்தின் உறுதியின் வடிவமாக எங்கள் தேசியக்கொடி உலகத்தமிழ்மக்களிடையே எழுச்சிகொண்டு நிற்கின்றது.
உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.
மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடு விப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.
நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.