உலகின் முதல் நோயெதிர்ப்பு மருந்துக்காக 22 குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
1700 களின் இறுதிப்பகுதியில் உலகை உலுக்கிப்போட்ட அம்மை நோயின் பின்னதாக, உலகின் முதலாவது நோயெதிர்ப்பு மருந்தின் வரலாறு தொடங்குவதாக சொல்லப்படுகிறது. அம்மை நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சத வீதமானோர் உலகெங்கும் மரணமடைந்துபோக, எஞ்சியவர்களுக்கான மருந்தேதும் இல்லாத காலத்தில், பிரித்தானிய மருத்துவரான ” Edward Jenner” என்பவரின், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியோடு இவ்வரலாறு ஆரம்பமாகிறது.
மாடுகளில் அவதானிக்கப்பட்ட அம்மை நோயை ஒத்த நோயை கொண்டிருந்த மனிதர்கள், சாதாரண அம்மை நோயினால் பீடிக்கப்பட்டவர்களைப்போல் பாதிக்கப்படவில்லை என்பதை அவதானித்த பிரித்தானிய மருத்துவரான ” Edward Jenner”, மாடுகளில் காணப்பட்ட அம்மை நோய்க்கிருமிகளை மனிதர்களின் உடலில் வேண்டுமென்றே பரவ விட்டு மேற்கொண்ட ஆய்வுகளில், இக்கிருமிகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் அம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி மேம்பாடடைந்ததை கண்டார். இதுவே, உலகின் முதலாவது நோயெதிர்ப்பு மருந்து என அடையாளப்படுத்தப்படுகிறது.
தற்போதைய “கொரோனா” எதிர்ப்பு மருந்தை, 70 பாகை உறைநிலையில் வைத்து பத்திரமாக உலகம் முழுவதும் கொண்டு செல்வது பற்றி அதிகம் இன்று பேசப்படும் நிலையில், முதலாவது நோயெதிர்ப்பு மருந்து அறியப்பட்ட காலத்தில், ஊசிமூலம் எடுத்துச்செல்ல முடியும் என்ற அறிவியல் தெரிந்திருக்காத காலத்தில், இத்தடுப்பு மருந்தை எவ்வாறு வேறிடங்களுக்கு அந்தக்காலத்தைய மனிதர்கள் கடத்தினார்கள் என்பது, பல உயிர்பலிகள், தார்மீக மீறல்கள், மனிதாபிமான மீறல்கள் போன்றவற்றின் மீதே பயணித்துள்ளது.
ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்கு கடத்தப்படும் முறையிலேயே, அதாவது, மனிதர்களிடையே எதிர்ப்பு கிருமிகளை தொற்ற வைத்து, தொற்றுதலுக்கு உள்ளான மனிதர்களை வேறிடங்களுக்கு கொண்டு செல்வதன் மூலமே, மேற்படி நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்கும் கிருமிகள் உலகெங்கும் பரப்பப்பட்டன.
உலகின் முதலாவது தடுப்பு மருந்துக்கான முதல்படியை இட்டவர் என அறியப்படும் பிரித்தானிய மருத்துவரான “Edward Jenner”, மாடுகளில் அவதானிக்கப்பட்ட அம்மை நோய்க்கிருமிகளை மனிதர்களின் உடலில் தொற்ற வைத்தபோது, மனிதர்களின் உடலில் தோன்றிய கொப்பளங்களில் நிறைந்திருந்த திரவத்தை எடுத்து பத்திரப்படுத்தியதோடு, ஏனையவர்களின் உடலில் துளையிட்டு, அத்துளையினூடாக, பத்திரப்படுத்தி வைத்த அத்திரவத்தை செலுத்தியதன் மூலம், மனிதர்களுக்கு நோயெதிர்ப்பு மருந்தை செலுத்தும் முறையை கையாண்டார்.
குறிப்பிட்ட தூர எல்லைகளுக்குள் இருப்பவர்களுக்கு இம்முறையை பாவிப்பதில் சிக்கல்களேதும் இருக்கவில்லை. எனினும், வேற்று நாடுகளுக்கும், உலகத்துக்கும் எதிர்ப்பு சக்தியை வரவழைக்கும் கிருமிகளை பரப்புவதற்கு கையாளப்பட்ட முறைதான் கொடுமையானது.
இக்கொடுமையான முறைமை, “ஸ்பெயின்” லிருந்த சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி பிரித்தானிய மருத்துவரான ” Edward Jenner” என்பவரின் ஸ்பானிய நண்பரான “Francisco Javier de Balmis” என்ற வைத்தியர் கொடுத்த யோசனையின் அடிப்படையில், குறித்த ஸ்பானிய சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த, பெற்றோரோ, உறவுகளோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாதிருந்த 22 இளம் சிறுவர்கள் குறிவைக்கப்பட்டார்கள்.
கேட்க யாருமில்லாத அவ்விளம் சிறுவர்களுக்கு மேற்படி நோயெதிர்ப்பு கிருமிகளை பரப்பி, அச்சிறுவர்களை கடல் கடந்து, ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழிருந்த இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைப்பதன்மூலம், நோயெதிர்ப்பு கிருமிகள் முதல்முறையாக பூமியின் இன்னொரு பக்கத்துக்கு பரப்பப்படும் கொடுமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிருமிகாவிகளாக பயன்படுத்தப்பட்ட 22 இளம் சிறுவர்களுக்கும், கப்பல் பயணத்தின்போது சுவையான உணவு கிடைக்குமென்றும், இலத்தீன் அமெரிக்க நாடுகளை அடையும்போது அச்சிறுவர்களுக்கு கல்வி வசதி கிடைக்குமென்றும், வளர்ப்பு பெற்றோர்கள் கிடைப்பார்கள் என்றும் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக அப்போதைய ஸ்பானிய அரசனால் சிறுவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.
மேற்படி 22 சிறுவர்களையும் கொண்ட கப்பல், 1803 ஆம் ஆண்டில் ஸ்பெயினிலிருந்து புறப்படுவதற்கு சற்று முன்னதாக 2 சிறுவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வரவழைக்கும் கிருமிகள் பரப்பப்பட்டன. நீண்ட கப்பல் பயணத்தின்போது, அடுத்த 2 சிறுவர்களுக்கு கிருமிகள் தொற்ற வைக்கப்பட்டன. இவ்வாறே பயணத்தின்போது ஏனைய சிறுவர்களுக்கும் கிருமிகள் தொற்ற வைக்கப்பட்டன. இம்முறையை கையாண்டதன் மூலம், கிருமிகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படக்கூடியதாக இருந்திருக்கிறது.
என்றாலும், நீண்ட கப்பல் பயணத்தின் முடிவில் 22 சிறுவர்களில் 21 சிறுவர்கள் கிருமிகளை தாங்க முடியாமல் பரிதாபமாக மாண்டு போனார்கள். இலத்தீன் அமெரிக்க நாடான “வெனிசூலா” நாட்டின் “Caracas” கரையை கப்பல் தரை தட்டும்போது கிருமி காவியான ஒரேயொரு சிறுவன் மட்டுமே உடல் நிறைய கொப்பளங்களோடு உயிரோடு இருந்திருக்கிறான்.
குறித்த சிறுவனை வேகமாக கரைக்கு கொண்டுசேர்த்த ஸ்பானிய வைத்தியர் “Francisco Javier de Balmis”, சிறுவன் மரணமடைவதற்கு முன்னதாக, அவனது உடலில் காணப்பட்ட கொப்பளங்களில் நிறைந்திருந்த, நோயெதிர்ப்பு கிருமிகளடங்கிய திரவத்தை எடுத்து, அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு கொடுத்தார். இதன்மூலம், சுமார் இரு மாதங்களில் 12.000 பேருக்கு அம்மை நோய்க்கான நோயெதிர்ப்பு கிருமிகள் பரப்பப்பட்டன.
இணைப்பு:
வெனிசூலாவில் நடவடிக்கைகளை மேற்கொண்டபின், “மெக்ஸிகோ” சென்ற, ஸ்பானிய மருத்துவரான “Francisco Javier de Balmis”, அங்கு சுமார் 100.000 பேருக்கு நோயெதிர்ப்பு கிருமிகளை செலுத்தினார். அங்கிருந்து “பிலிப்பைன்ஸ்” நோக்கிச்சென்ற அவர், மீண்டும் சிறுவர்களையே கிருமிகாவிகளாக தன்னோடு கொண்டு சென்றார். குறித்த சிறுவர்களை, அவர்களது பெற்றோர்களே கிருமிகாவிகளாக வைத்தியரோடு செல்ல அனுமதித்ததும், அதற்காக வைத்தியரிடமிருந்து அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டதும் வரலாற்றின் கரும்பக்கங்கள்.
என்றாலும், நோயெதிர்ப்பு கிருமிகளை உலகெங்கும் பத்திரமாகவும், உயிரோடும் கொண்டு செல்வதற்கான எவ்விதமான வேற்று முறைமைகளும் இருந்திருக்காத அக்காலத்தில், சொந்தங்கள் இல்லாத சிறுவர்களை கிருமிகாவிகளாக பயன்படுத்தி, பத்து வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் இந்த நோயெதிர்ப்பு முறைமையை உலகெங்கும் பரவ வைத்தார், ஸ்பானிய மருத்துவரான “Francisco Javier de Balmis”. இதன்மூலம் பல மில்லியன் உயிர்கள் காக்கப்பட்டதும் சரித்திரமாகும்.
ஏதுமறியா அப்பாவிச்சிறுவர்களின் உயிர்பலிகள், தார்மீக மீறல்கள், மனிதாபிமான மீறல்கள் போன்றவற்றின் மீது பயணித்த இவ்வரலாறின் தொடக்கமே, இன்று சாதாரண தடிமனுக்கும் “வக்ஸீன்” என்ற நிலையில் நாம் பத்திரமாக இருக்கிறோம் என்ற யதார்த்ததிற்கு மத்தியில், இவ்வரலாறை எழுதி வைத்து மாண்டுபோன 22 அப்பாவி சிறுவர்களை மறக்கலாகுமோ…..