ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உளளடக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு 2021ற்கான பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் முதல் முறையாக இரண்டு பெண்கள் உட்பட பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட 37 உலக நாடுகளின் தலைவர்களின் புகைப்படத்தை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இலங்கை மீண்டும் ஒரு இருண்ட காலத்திற்குள் சென்றுள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது குறைந்தது 14 ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் என்றும் சுமார் 20 பேர் சித்திரவதை அல்லது மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பின்னர் நாட்டை விட்டு வெளியேறினர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த பின்னணியில், தமிழ் சிறுபான்மையினரின் அல்லது இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்தின் அவலநிலை போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த புலனாய்வுச் செய்திகளை வெளியிடும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர் என்றும் குறித்த அமைப்பு கூறியுள்ளது.