ஊரடங்கால் முடங்கும் இந்தியா : கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு!

  • Post author:
You are currently viewing ஊரடங்கால் முடங்கும் இந்தியா : கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு!

ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 14 கோடி தொழிலாளர்கள் வேலையிழந்த அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் 26 சதவீதமாக வீழ்ந்து பல கோடி குடும்பங்கள் பசிப்பிணியில் சிக்கித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பைக் காட்டிலும் தற்போது பாதிப்பு அதிகம் என இந்திய பொருளாதார ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மாத காலமாக ஊரடங்கால் நாடே முடங்கிக் கிடக்கிறது. அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும் நிலையில் நாட்டின் மிகப் பெரும்பான்மையினரான அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாபெரும் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.

அன்றாடம் வேலைக்கு சென்றால் மட்டுமே வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் வாழும் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வறுமை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. சொந்த ஊர் நோக்கி பல நூறு கிலோமீட்டர் நடந்துச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரை பறிகொடுக்கும் சம்பவங்களும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இந்த வேலையிழப்பின் கொடூர தாக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்தியாவின் பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 40 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பு விகிதம் தற்போது 26 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருப்பதாக சி.எம்.ஐ.இ தெரிவித்துள்ளது. அதாவது வேலை பார்க்கும் வயது வரம்பினரில் 14 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதை சி.எம்.ஐ.இ கண்டறிந்துள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் 27 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பு விகிதம் தற்போது 26,1 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்திருப்பதையும் சி.எம்.ஐ.இ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நகரப்பகுதிகளில் வேலைவாய்ப்பு விகிதம் 26,7 விழுக்காடாக சரிந்திருப்பதுடன் ஊரகப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட அதே விழுக்காடு அளவு, அதாவது 25,1 விழுக்காடு வேலைவாய்ப்பு குறைந்திருப்பதாக சி.எம்.ஐ.இ கூறியுள்ளது.

2016 ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பைக் காட்டிலும் தற்போது பாதிப்பு அதிகம் என இந்திய பொருளாதார ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பகிர்ந்துகொள்ள