இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மே 3ம் திகதிவரை அனைத்து தொடருந்து சேவைகளுக்குமான தற்காலிக ரத்து நீட்டிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் 24ந் திகதி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இந்திய பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து தொடருந்து, விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் தொடருந்து பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த கட்டணம் முழுவதும் பொதுமக்களிடம் திரும்ப வழங்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் (ஏப்ரல் 15ந் திகதி) தொடருந்து போக்குவரத்து தொடர்ந்து செயல்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், நாட்டு மக்களிடம் இன்று காலை பேசிய இந்திய பிரதமர் மோடி, வரும் 3 ம் திகதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து தொடருந்து அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், பிரீமியம், மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள், புறநகர், கொல்கத்தா மெட்ரோ ரெயில், கொங்கன் ரெயில்வே உள்ளிட்ட பயணிகளுக்கான அனைத்து தொடருந்து சேவைகளும் வரும் மே 3 ம் திகதி வரை தற்காலிக ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்து உள்ளது.