கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் சட்டவிரோதமாகவே அமுல் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம், சட்டவிரோதமான முறையில் அமுல் செய்யப்பட்டுள்ளதால், ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மீது நடவடிக்கை எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மார்ச் 20ஆம் திகதி தொடக்கம், மே 27ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது, தவறான முறையில் கைது செய்யப்பட்டதாக தமக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்றும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு, பொலிசார் 1897 ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தினாலும், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு எந்த சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்றும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு கட்டளை சட்டங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்துவற்கு போதுமான அதிகாரங்களை வழங்கவில்லை என்றும், ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆனால் அது சட்டபூர்வமாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் சர்வதேச கடமைகளுக்குட்பட்ட வகையிலும், செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.