தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளிட்டிருக்கும் அறிக்கையில், செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அனைத்துக் கல்லூரிகளும் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் என்றும், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் செப்டம்பர் 1 முதல் மதிய உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்படும் என்றும், மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐ.டி நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 50 சதவித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் 50 விழுக்காடு பயிற்சியாளர்களுடன் செயல்படவும், கடற்கரைகளில் பொதுமக்கள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டு, இரவு 10 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.