எட்டாப்பழம் புளித்தலும், 13 ஐ பேசுபொருளாக வைத்திருப்பதும்…!

You are currently viewing எட்டாப்பழம் புளித்தலும், 13 ஐ பேசுபொருளாக வைத்திருப்பதும்…!

இத்தலையங்கமே, விடயம் என்னவாக இருக்குமென்பதை இலகுவாக ஊகித்துக்கொள்ள முடியுமான இயல்நிலையை கொடுத்தாலும், சில விடயங்களை அடிக்கடி எமது மக்களுக்கு திரும்பத்திரும்ப சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

11.09.2023 அன்றைய “ஈழநாடு” மின்னிதழில், திரு. யதீந்திரா வரைந்ததாக ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. “ஏன் மீண்டும் 13 ஆவது திருத்தச்சட்டம் பேசுபொருளானது…?” என்ற தலைப்பில் வரையப்பட்ட அக்கட்டுரை, தமிழ்மக்களால் 1987 ஆம் ஆண்டிலேயே நிராகரிக்கப்பட்ட 13 ஐ தூக்கி, மீண்டும் தமிழ்மக்களின் தலையில் சுமக்க வைத்து, படுகுழியில் தள்ளிவிடும் வேலைத்திட்டத்தையே உள்ளடக்கியது என்பது அப்பட்டமானது.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது, அது முன்மொழியப்பட்ட 1987 ஆம் ஆண்டுகாலப்பகுதியிலேயே, தமிழ்மக்களால் மாத்திரமல்லாமல், தென்பகுதி சிங்களமக்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது வரலாறு. தென்னிலங்கை இதனை எதிர்ப்பதற்கு, இந்திய எதிர்ப்பு மனோநிலை என்பதைத்தவிர வேறு காரணங்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், தமிழ்மக்கள் இதனை எதிர்த்தமைக்கு வலுவான, தார்மீகமான காரணங்கள் இருந்தன; இவை, இன்றும் அப்படியே இருக்கின்றன. இருந்தாலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் சகாப்தத்திற்கு பின்னர், அரசியல் பாதையில் எழுச்சி பெற்றிருக்க வேண்டிய தமிழர்களின் தேச உரிமை சார்ந்த உரிமைப்போராட்டத்தை, மாபெரும் இனவழிப்புக்கு உள்ளாகி துவண்டு போயிருந்த தமிழினம் நம்பிய தலைவர்கள் என்று அன்று சொல்லப்பட்டவர்கள் தூக்கி நிறுத்தியிருக்க வேண்டும்; அதை அவர்கள் செய்யவில்லை.

தனது பிராந்திய நலன்களை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, இலங்கைத்தீவில் மாபெரும் இனவழிப்பை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு முழு அளவில் துணைநின்ற இந்தியாவின் பிராந்திய நலன்கள் சார்ந்த வேலைத்திட்டத்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கப்பட்டார்கள், தமிழ் அரசியல்வாதிகள். ஒரு கட்டத்தில், தங்களை பிரதிநிதிகளாக வரித்துக்கொண்ட தமிழ்மக்களுக்கான அரசியலை செய்யவும், அவர்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசவும் மறந்த நிலைக்கு வந்த இந்த தமிழ் அரசியல்வாதிகள், இந்திய பிராந்திய நலன்களை பற்றி மட்டும் கவலைப்படும் நிலைக்கும் வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அடுத்ததாக, தமது ஒரேயொரு நம்பிக்கையாக தமிழ்மக்கள் முழுமையாக நம்பியிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, தமிழ்மக்களுக்கான நியாயமான, நீதியான அதிகாரப்பகிர்வேதும் தமிழ்மக்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் விழிப்பாயிருக்கும் இந்தியாவின் நகர்வுகளுக்குள் உள்வாங்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்மக்களுக்கு எதுவிதமான அதிகாரப்பகிர்வுகளையும் கொடுப்பதற்கு முகாந்தரமில்லாத, இலங்கையின் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாக, எந்நேரத்திலும் இலங்கை அரசு திரும்ப பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான வரைபுகளோடு கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்தது, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு.

13 ஆவது திருத்தச்சட்டம் மூலம் ஏதாவது நன்மைகள் தமிழ்மக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்திருப்பின், அது முன்மொழியப்பட்ட 1987 காலப்பகுதியிலேயே தமிழ்மக்களாலும், அவர்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளாலும் அது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். அதனடிப்படையில் தீர்வொன்றும் எட்டப்பட்டிருப்பதோடு, இத்தனை உயிர்த்தியாகங்கள் எமது தேசத்திற்காக நிகழ்ந்திருக்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது. 13 என்பதை புலிகள் எழுந்தமானமாக நிராகரித்திருப்பார்கள் என நம்புவதற்கு தமிழ்மக்கள் என்றுமே தயாராக இருந்ததில்லை. புலிகளின் அரசியல் பிரிவு, அரசறிவியல் ஞானமுள்ள சான்றோர், சட்ட வல்லுநர்கள் என பலதரப்பட்ட மட்டங்களிலும் ஐயந்திரிபற ஆராயப்பட்ட பின்பே அதை முற்றதாக நிராகரிக்கும் முடிவை புலிகள் எடுத்திட்டார்கள் என்ற அடிப்படையிலேயே தமிழ்மக்களும் அன்று அந்த முடிவை ஆதரித்ததோடு, இன்றும் அந்த முடிவிலேயே திடமாக உள்ளார்கள் என்பதும் வெளிப்படை.

2009 இனவழிப்பின் பின் துவண்டு போயிருந்த தமிழ்மக்கள் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை கிரகிக்கும் நிலையில் இருந்திருக்கவில்லை என்பதே அன்றைய களநிலையாக இருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு காய்களை நகர்த்தியது இந்தியா. வலையில் சிக்கியது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தமிழ்மக்களுக்கான அரசியல் போராட்டத்தையும் சமகாலத்தில் முன்னெடுக்க வேண்டிய யதார்த்தத்தின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, அதன் உருவாக்கத்தின் அடிப்படையை மறந்து, இந்திய ஆதிக்கத்தின் விருப்பமான 13 மட்டுமே தமிழ்மக்களின் அரசியல் தீர்வு என நிலையெடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு வந்தது. அதிலும், தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்ட “சமஷ்டி கட்சி” யான தமிழரசுக்கட்சி, தன் உருவாக்கத்தின் மையக்கருத்தை மறந்து, துறந்து, பாதை பிறழ்ந்து, இந்திய நலன்களுக்காகவே உருவாக்கப்பட்ட 13 ஐ ஏற்றுக்கொள்வதாக உறுதிமொழி எடுத்து, தமிழ்மக்களுக்கு துரோகம் செய்ய துணிந்ததோடு மட்டும் நின்றுவிடாது, சமஷ்டி கொள்கையை முன்னிறுத்தி அக்கட்சியை உருவாக்கிய தந்தை செல்வா அவர்களுக்கும் துரோகமிழைத்தது.

திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இனவழிப்பின் கொடூரத்தால் தவித்துக்கொண்டிருந்த தமிழ்மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் மேம்பாடுகள் பற்றி சிறிதளவும் கவலை கொள்ளாமல், இந்திய ஆதிக்கத்துக்கு முதுகு வளைக்க முன்வந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அம்பலப்படுத்த, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்தின் உதயம் அவசியமானது. 2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாதைமாறிய பயணத்தை தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனது சக்தி அனைத்தையும் செலவிட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது என்ற ஒற்றை மந்திரமே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும், தமிழ்மக்களையும் ஒன்றாக பிணைத்து வைத்திருந்தமையானது, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இந்திய நலன் சார்ந்த பயணத்தை தமிழ்மக்கள் சரியாக புரிந்துகொள்ள 10 வருடங்களுக்கும் மேலான காலங்களை செலவு செய்ய வைத்துவிட்டது. இதற்காக தமிழ்த்ததேசிய மக்கள் முன்னணி சந்தித்த தோல்விகளும், அவமானங்களும், பின்னடைவுகளும் வரலாறு அறியும். எனினும், தமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு எதுவாக இருக்க முடியும் என்பதில் தமிழ்மக்களுக்கு சரியான புரிதலை கொண்டுவருவதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இன்று அடைந்துள்ள வெற்றி என்பது, அவ்வியக்கம் சந்தித்த தோல்விகளும், அவமானங்களும், பின்னடைவுகளும் மிகப்பெறுமதியானவை என்பதை நிரூபித்து நிற்கின்றன.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 10 வருட காலங்களுக்கு மேலான உழைப்பு, தமிழ்மக்களுக்கான நியாயமான தீர்வு, சமஷ்டி அடிப்படையில், நியாயமான அதிகாரப்பகிர்வோடு கூடிய, எக்காலத்திலும் மீளப்பெறப்பட முடியாத ஒன்றாகவே இருக்க முடியும் என்பதையும், இதனை தாண்டி, இந்திய விருப்பங்களை நிறைவேற்றும் 13 ஆவது திருத்தம் அல்ல என்பதையும் தமிழ்மக்கள் பரிபூரணமாக புரிந்துகொள்ள வைத்திருக்கிறது.

எட்டாப்பழம் புளித்தலும், 13 ஐ பேசுபொருளாக வைத்திருப்பதும்…! 1

கடந்த 14 வருடங்களில் தமிழ்மக்களுக்கான அரசியல் மேம்படவில்லையே, ஏன் என திரு. யதீந்திரா கவலைப்படுவதற்கான  காரணங்கள் தான் மேலே கூறப்பட்ட அனைத்தும். 

தமிழ்மக்களின் அரசியலையும், அரசியல் அபிலாஷைகளையும் இந்தியாவிடம் அடகு வைப்பதற்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, மற்றும் அதன் பங்காளிக்கட்சிகளின் நகர்வுகளை முறியடிக்கும் தேவை தமிழ்மக்களுக்கு இன்றியமையாததாக இருந்தது; அதை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்தால் செய்ய முடிந்திருக்கிறது. நிலையான அரசியல் தீர்வொன்றுக்காக, மக்களை தயார்படுத்துவது காலத்தின் தேவை என்பதும், தமிழ்மக்களுக்கு எது தேவை என்பதை தமிழ்மக்களே நிர்ணயிக்கவேண்டுமேயொழிய, இந்தியாவோ அல்லது திரு. யதீந்திரா போன்ற, இந்திய நியமனங்களோ அல்ல என்ற தெளிவு தமிழ்மக்களுக்கு முக்கியம் என்பதில் திரு. யதீந்திராவுக்கு தெளிவிருக்க வேண்டும்.

இருப்பதை காப்பாற்ற வேண்டும் என்று வாதிடும் திரு. யதீந்திராவுக்கு, திருமலையில் விகாரை அமைக்கும் விடயத்தில், கிழக்கு மாகாண ஆளுநரின் முடிவை, நாடாளுமன்றத்தில் வைத்து புத்த சாசன அமைச்சர் செல்லாக்காசாக்கியமை நினைவிருக்கலாம். திரு. யதீந்திரா நம்பும் 13 இனடிப்படையில் அமையும் மாகாணசபையின் குடுமியை தன்வசம் வைத்திருப்பவர் மாகாண ஆளுநர் என்பதும், எனினும், அந்த வல்லமை பொருந்திய ஆளுநரையே தூக்கி கடாசும் சர்வவல்லமை கொழும்புக்கு உண்டென்பதும் தெரியாமல் இருக்காது. இருப்பின், கிழக்கு ஆளுநர் தலைமையில் நடந்த சந்திப்புக்குள் அடாவடியாக நுழைந்த பிக்குகள் அடாவடி நடத்தியதை தடுக்க முடியாமல், கிழக்கு ஆளுநர் எழுந்து நின்று வேடிக்கை பார்த்ததையும், சந்திப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் சிறுமைப்பட்டுப்போனதையும், மேற்கொண்டு ஆளுநரால் எதிர் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாத இழிநிலையையும், தானே நியமித்த, தனது  பிரதிநிதியே அவமானப்பட்டு போனதையிட்டு அரசும் மூச்சு விடாததையும் மீண்டுமொருமுறை பார்த்தும், இருப்பதிலும் ஒன்றுமில்லை என்பதில் தெளிவடையலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற கீர்த்தி உண்மையானதா, மாயையானதா என்பதை பற்றி சிந்திக்க எவருமே புலிகள் காலத்தில் தயாராக இருக்கவில்லை எனவும், யதார்த்த நிலையை பேசியவர்களை, தான் உட்பட அப்போது யாருமே கண்டுகொள்ளவில்லை எனவும் திரு. யதீந்திரா கவலைப்படுகிறார். அப்படியா, திரு. யதீந்திரா…? புலிகளின் காலத்திலேயே அவர்களது சித்தாந்தங்களுக்கு மாறாக இருக்கும் விதத்தில், அதாவது, யதார்த்தமாக நீங்கள் சிந்தித்திருக்கிறீர்கள் என நம்பித்தொலைக்கிறோம். என்றாலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் சித்தாந்தத்துக்கு பங்கமில்லாமல் அவர்களால் உருவகப்படுத்தப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நீங்கள் திருமலையில் தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வாங்கியது, அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளின் சித்தாந்தம் வெறும் மாயை என்று தெரிந்திருந்தாலும்; அதாவது, யதார்த்தத்திற்கு மாறாக செயற்பட்ட திரு. சம்பந்தன் அவர்களது தலைமையில் தேர்தலில் நிற்கும் ஆசைக்காக, உங்கள் யதார்த்த அறிவியலை குழி தோண்டி புதைத்துவிட்டு, புலிகளால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் நிற்க ஆசைப்பட்டீர்கள் என்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நீங்கள் யதார்த்தத்தை நம்பும் சிந்தனாவாதியல்லவா. 

எட்டாப்பழம் புளித்தலும், 13 ஐ பேசுபொருளாக வைத்திருப்பதும்…! 2

சமஷ்டிக்கான பாதையை யாராலும் சொல்ல முடியவில்லை என ஆதங்கப்படும் திரு. யதீந்திரா, அந்த பாதை தெரியாமலா சமஷ்டிக்கட்சியான தமிழரசுக்கட்சியின் தலைமையில் தேர்தலில் நிற்க தலைப்பட்டீர்கள் என மக்கள் கேள்வியெழுப்புவது காதுகளில் விழுகிறதா…? சமஷ்டிக்கான வழிமுறைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கப்பட்டிருக்கிறன. குறிப்பாக, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேவைக்கு அதிகமாகவே அதைப்பற்றி விளக்கமளித்துள்ளார். விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை இல்லையெனில் சித்தம், எதையும் உள்வாங்க மறுக்கும்தான். தேர்தலில் நிற்க தலைப்பட்ட போது தெரிந்த சமஷ்டிக்கான பாதை, தேர்தல் ஆசனம் எட்டாக்கனியானதினாலும், இன்றைய இந்திய நியமனம் தரும் குபேர கோடிகளாலும் கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்து மறைந்து விட்டதோ.

திரு. சம்பந்தனாலும், திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தாலும், திரு. விக்னேஸ்வரனாலும் காத்திரமான நகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் ஏற்பட்ட இடைவெளியில், முன்னாள் ஆயுத இயக்கங்கள் 13 பற்றி பேச ஆரம்பித்தன; இதற்கு டெலோ அமைப்பு பிள்ளையார் சுழி போட்டது என்று திரு. யதீந்திரா அங்கலாய்ப்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். திரு. யதீந்திரா குறிப்பிடும், முன்னாள் ஆயுத இயக்கங்கள் அனைத்தினதும் வரலாறுகளை அறியாதவரா திரு. யதீந்திரா…? தமிழீழ தேசத்தின் விடுதலை என்று புறப்பட்ட இவர்கள், பின்னாளில் எவ்வாறு இந்திய வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு பாதை மாறினார்கள் என்பது, இப்போது இந்திய நியமனத்தில் சுழலும் திரு. யதீந்திரா கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டியவை. டெலோ இயக்கம், இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கொள்கைகளையே  தமக்கான கொள்கையாக பின்னாளில் மாற்றிக்கொண்டவர்கள். “வங்கம் தந்த பாடம்” கொடுத்த பாடத்தை மறக்காத புளொட். “இந்தியாவை பாவிக்க நங்கள் நினைத்தோம்; ஆனால், இந்தியா எம்மை பாவித்து விட்டது” என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என இவையனைத்தும் இந்திய ராடார் வட்டத்துக்குள் சுற்றிவருபவையே என்பதை தமிழ்மக்கள் அறியாதவர்களல்ல. அதனால், அவர்கள் 13 ஐ கையிலெடுப்பது தமிழ்மக்களுக்கு ஆச்சரியமானதொன்றானதுமல்ல. முன்னாள் ஆயுத இயக்கங்களே 13 ஐ பேசுகின்றன; அதனால் அதுதான் யதார்த்தமாக இருக்கும் என்பது திரு. யதீந்திராவின் சிந்தனாசக்திக்கு பொருந்திவரக்கூடும்; ஆனால், தமிழ்மக்களின் சிந்தனாசக்தி என்பது, மீண்டும் அடிமைத்தளைக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதை மையப்படுத்தியது.

13 ஐ கையிலெடுத்திருக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்களும் ஒரு கட்டத்தில், சமஷ்டியே எங்களது விருப்பமும் என்று கரணமடிப்பது ஏனென்றும் திரு. யதீந்திரா சிந்தித்துப்பார்க்க வேண்டும். 13 முன்னிறுத்தி தமிழ்மக்கள் முன்னால் போய் வாக்கு கேட்க முடியாது என்ற யதார்த்தம் புரிந்த அவர்களால் தமிழ்மக்களுக்கும் உண்மையாக இருக்க முடியாது; இந்தியாவுக்கும் உண்மையாக இருக்க முடியாது. இந்த இடைவெளியில் “சிவில் சமூக அமைப்பு” என்ற பெயரின் பின்னால் மறைந்திருந்து 13 ஆதரவு திரட்டுவதற்கு, திரு. யதீந்திராவும் யந்திரமாக சுழல்வதை, அவரது சமீபத்திய கருத்துருவாக்க முயற்சிகள் தெளிவாகவே எடுத்துக்காட்டுகின்றன என்பதும் தமிழ்மக்கள் சரியாக கணித்திருக்கும் ஒன்றுதான்.

எட்டாப்பழம் புளித்தலும், 13 ஐ பேசுபொருளாக வைத்திருப்பதும்…! 3

13 பற்றி யாரவது பேசினால், அவர்கள் இந்திய நியமனங்கள் என்று சட்டென்று புரிந்துகொள்ளப்படுவதில் தவறென்ன இருக்க முடியும், திரு. யதீந்திரா…? தமிழ்மக்கள் அடியோடு நிராகரித்த, தமிழ்மக்களை கூட்டி வைத்து எந்த தமிழ் அரசியல்வாதிகளும் பேச தைரியமில்லாத 13 ஐ இந்தியா மட்டும்தான் பேசுகிறது என்கிற அடிப்படையில், தமிழ்மக்களின் இந்த புரிதலில் என்ன தவறு இருக்க முடியும்…?? முடிந்தால், 13 ஐ தமிழ்மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை ஒவ்வொரு சந்தி சந்தியாக, வீடு வீடாக சென்று, மக்களிடம் கருத்தறிந்து தெளிவுபெற முயற்சியுங்கள் திரு. யதீந்திரா. டெல்லிக்கு நீங்கள் அழைக்கப்படும்போது, அங்கு சமர்ப்பிக்க இந்த ஆய்வு நிச்சயமாக உதவும்.

தமிழ்மக்கள் 13 ஐ எதிர்ப்பது எதற்காக என்கிற மக்கள் கருத்துக்களை அறிய முற்படாமல், 13 ஐ ஆதரிப்பவர்கள் இந்திய நியமனங்கள் என்ற களநிலவரத்தை யாரும் வெளிப்படுத்தினால், அவர்களுக்கு சீனா ஆதரவளிக்கிறது என்று நினைக்க தோன்றுவதெல்லாம் திரு. யதீந்திராவுக்கு மட்டுமேயுள்ள மேலதிக அதிமேதாவித்தனம் என்று மட்டுமே கருதிக்கொள்ள முடியும்.

தமக்கான அரசியல் தீர்வு, சமஷ்டி அடிப்படையிலானது மட்டுமே என்பதில் தமிழ்மக்கள் தீர்க்கமான மனோதிடத்தோடு இருக்கிறார்கள் என்பதை எவ்வாறு உறுதியாக சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு சொல்லக்கூடியது ஒன்றுதான். 13 இன் அடிப்படையில்தான் தீர்வு என்ற விளக்கத்தோடு தமிழ்மக்களை நேரில் சந்திக்க யாரும் இதுவரை முயன்றதில்லை. அதற்கான துணிவும் யாருக்கும் கிடையாது. 2009 இனவழிப்பின் பின், 13 தான் தீர்வாக இருக்க முடியும் என்ற இந்திய சார்பு நிலையை எடுத்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூட, பின்னதாக வந்த நாடாளுமன்ற தேர்தலில் சமஷ்டிக்கு வாக்களியுங்கள் என்றே தமிழ்மக்களிடம் கையேந்தியதேயொழிய, 13 இற்கு வாக்களியுங்கள் என்று கேட்கவில்லை. உட்கட்சி முரண்பாடுகளுக்காக செய்தியாளர் மாநாட்டை கூட்ட முடிகின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளால், 13 மட்டுமே சாத்தியமான தீர்வாக இருக்க முடியுமென விளக்குவதற்கு மக்கள்முன் செல்வதற்கு திராணியற்றவையாக இருக்கின்றன.

இவ்வளவு ஏன், இன்றுள்ள நிலையில் இருப்பதை தக்க வைக்கவேண்டும், அதனால் 13 ஐ ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்வோம் என்று கூறும் யாராலும், 13 மட்டுமே யதார்த்தம் என்று கூறும் திரு. யதீந்திரா உட்பட, மக்களை நேரடியாக சந்தித்து 13 மட்டும்தான் தீர்வாக இருக்க முடியும் என சொல்ல முடியவில்லையே என்பதையே சவாலாக முன்வைக்கலாம். சமஷ்டிக்காக பாடுபட்ட தந்தை செல்வா அவர்களின் பெயரில் அமைந்த நினைவு மண்டபத்தில் வைத்து, அந்த தந்தை செல்வாவையே அவமதிப்பது போல, தமிழ்மக்கள் நிராகரித்த, 13 இன் விளக்கத்தை கொடுக்கவென, யாழ். பல்கலைக்கழ சட்டத்துறை பீடாதிபதி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், முன்னாள் முதலமைச்சர் என்று பெரும் பட்டாளத்தை முன்னிறுத்தி கூட்டிய கூட்டத்தை தமிழ்மக்கள் நிராகரித்தமையே, 13 பற்றி தமிழ்மக்கள் தெளிவோடுதான் இருக்கிறார்கள் என்பதை அனைவரது மண்டைகளிலும் அறைந்து சொன்னது.

ஆனாலும், தனது செயற்திட்டங்களுக்கு வளைந்து கொடுப்பவர்களை வைத்து இந்தியாவும் தனது முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறது. அதன் நீட்சியே இந்திய நியமனங்களில் ஒன்றாக தன்னை வெளிப்படுத்தியிருக்கும் திரு. யதீந்திரா போன்றவர்களின் கருத்துருவாக்க முயற்சிகளும். 

குகன் யோகராஜா

14.09.2023

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply