எமிரேட்ஸ் அதன் பயணிகளை துரித கதியில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்த ஆரம்பித்திருக்கிறது!

You are currently viewing எமிரேட்ஸ் அதன் பயணிகளை துரித கதியில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்த ஆரம்பித்திருக்கிறது!

முன்னணி விமான சேவை நிறுவனமான ‘எமிரேட்ஸ்’ அதன் பயணிகளை துரித கதியில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் Terminal 3 தளத்தில் இருந்து இன்று துனீசியாவுக்குப் புறப்பட்ட பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக check – in பிரிவில் வைத்து துரித இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.உடனடியாகவே அனைவருக்கும் ‘கொவிட் 19’மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது.

சுமார் பத்து நிமிடங்களில் முடிவை அறிந்து கொள்ளக்கூடியவகையில் அமைந்த இந்த பரீட்சார்த்த சோதனை படிப்படியாக தனது எல்லா விமான சேவைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எமிரேட்ஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

நோய்த் தொற்று உள்ளவர்கள் விமானத்தில் ஏறிப் பயணிப்பதை தடுப்பது, அதன்மூலம் சக பயணிகளின் நம்பிக்கையை பெறுவதும் நோய்ப்பரம்பலை குறைப்பதும் இதன் நோக்கங்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பயணிகளுக்கு வழங்கப்படும் சோதனைச் சான்றிதழ் அவர்கள் பயணிக்கும் நாடுகளுக்குள் பிரவேசிக்கும் போது தொற்று அற்றவர்கள் என்று தங்களை நிரூபிப்பதற்கும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவுச் சோதனை போன்று விரல்களில் அழுத்தும் சிறு கருவிகள் மூலம் இந்த இரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது.

பொதுவாக வைரஸ் தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தாத நிலையில் ஒருவரிடம் நடத்தப்படும் இரத்தப் பரிசோதனை, அவரது இரத்தத்தில் பிறபொருள் எதிரிகளின் (Antibodies) தன்மையை மட்டுமே காட்டும். அதனை வைத்தே இந்தப் பரிசோதனை முடிவு துரிதமாக எடுக்கப்படுகிறது. எனினும் இந்தப் பரிசோதனையின் நம்பகத் தன்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போதைய உள்ளிருப்பு பொதுமுடக்கம் முடிவடைந்து விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் போது இது போன்ற பலவித சோதனைகளுக்கு பயணிகள் முகம் கொடுக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

எமிரேட்ஸ் அதன் பயணிகளை துரித கதியில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்த ஆரம்பித்திருக்கிறது! 1

15-04-2020

(நன்றி குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள