ஷெங்கன் எல்லைகள் தொடர்ந்து செப்ரெம்பர் வரை மூடப்படும்?
ஒருவேளை உள்ளிருப்புக்காலம் முடிவுக்கு வந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டு நிலைமை ஓரளவு சீரடைந்தாலும் எல்லை தாண்டி வெளி நாடுகளுக்குப் போய் வருவது தொடர்ந்து சில மாதங்களுக்குக் கட்டுப்படுத்தப்படலாம்.
ஜரோப்பாவின் 26 நாடுகளை இலகுவில் கடந்து செல்ல உதவும் ஷெங்கன் (Schengen) எல்லைகளைக் குறைந்தது செப்ரெம்பர் மாதம் வரை மூடி வைத்துப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த உயர் மட்டங்களில் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசுத் தலைவர் மக்ரோன் திங்களன்று நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள மூன்றாவது தொலைக்காட்சி உரையில் இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
‘கொவிட் 19’ வைரஸ் ஒரே சமயத்தில் பரவி, ஒன்றாக கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடிய நிலைமை உலகில் எங்கும் காணப்படவில்லை. அதன் பரம்பலும் வீச்சும் சேதங்களும் சரிவும் நாடுகளுக்கு நாடு, கண்டங்களுக்குக் கண்டம் வேறுபடுகிறது.
ஜரோப்பிய நாடுகள் பலவற்றின் நிலைமையும் இதுதான். வைரஸின் கோரப்பிடியில் இருந்து ஒருநாடு சற்று விடுபடுகின்ற போது அடுத்த நாட்டில் அதன் பரவல் வேகம் கொள்கின்றது. இந்த நிலைமையில் மக்கள் நாடுகளுக்கு இடையே பயணிப்பது மீண்டும் ஆபத்தான நெருக்கடிகளை உருவாக்கும் என்று கணிக்கப்படுகிறது. எனவே எல்லைகளை குறைந்தது கோடை விடுமுறைக்காலம் (ஜூலை, ஓகஸ்ட்) முடியும் வரையாவது தொடர்ந்து மூடிவைக்க உத்தேசிக்கப் படுகிறது.
பயணப் பதிவுகளைத் தவிர்த்து கோடை விடுமுறையை நாட்டுக்குள்ளேயே செலவிடுங்கள் என்று பிரான்ஸின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஏற்கனவே மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
“விடுமுறையில் செல்ல வேண்டாம் என்று கூறவில்லை. உலகின் இன்னொரு பகுதிக்குச் செல்லப் பயணப்பதிவுகளைச் செய்யும் நேரம் இதுவல்ல என்றுதான் ஆலோசனை சொல்கிறோம்”
இப்படி அவர் கூறியுள்ளார்.
அவரது நிலைப்பாட்டை ஒத்த ஆலோசனைகளையே அரசுத் தலைமையும் நாட்டு மக்களுக்கு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(நட்றி குமாரதாஸன்)