நோர்வே – சுவீடன் எல்லையில் கடந்த மூன்று நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவசர உயிர்காப்பு மற்றும் தொற்றுத்தடை மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பாரவூர்திகள் இன்று நோர்வேக்குள் நுழைவதற்கான அனுமதியை சுவீடன் வழங்கியுள்ளது!
ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதிகள் தொடர்பான சட்டவிதிகளின்கீழ், நோர்வே – சுவீடன் எல்லையில் சுவீடன் சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாரவூர்திகள், அவசரநிலைமைகளை கருத்தில் கொண்டு நோர்வேக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருப்பதாக நோர்வே சுகாதாரத்துறை அமைச்சர் “Bent Høie” ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேற்கூறப்பட்ட அவசர மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு நோர்வேயில் நிலவிவரும் நிலையில், வேறு நாடுகளிலிருந்து இவ்வுபகரணங்களை நோர்வே வரவழைத்திருந்தது. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி சட்டவிதிகளை காரணம் காட்டிய, ஐரோப்பிய ஒன்றிய நாடான சுவீடன், கடந்த மூன்று நாட்களாக பாரவூர்திகளை, ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடல்லாத நோர்வேக்குள் நுழைய அனுமதியை மறுத்திருந்ததால் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.
இதனையடுத்து, உயர்மட்டங்களூடாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் மட்டத்திலான தொடர்பாடல்களின் பின், மேற்படி பாரவூர்திகள் நோர்வே எல்லைக்குள் வருவதற்கான அனுமதி சுவீடனால் வழங்கப்பட்டுள்ளது.