யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஜெய் கணேஷ் கடந்த வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற பேசிங்ஸ்டோக் மற்றும் டீன் நகரசபைக்கான தேர்தலில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷெர்போர்ன் செயின்ட் ஜான் மற்றும் றூக்ஸ்டவுண் தொகுதிக்கு தெரிவுசெய்யப்பட்ட மூன்று கன்ஸர்வேட்டிவ் கட்சியின் கவுன்சிலர்களில் ஒருவராக இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் செயின்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் பயின்ற இவர், கொழும்பு இந்து கல்லூரியில் தனது படிப்பைப் நிறைவுசெய்தார்.லண்டன் மெற்றோபொலிடன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுற்றுலா நிர்வாகத்தில் பட்டம் பெற்ற அவர், உள்ளூராட்சி அரசாங்கத்தில் பத்து வருடங்களுக்கு பணியாற்றியுள்ளார்.
தனது பள்ளி நாட்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றிய இவர், தனது பல்கலைக்கழக காலத்தில் இளங்கலைமாணி பட்டத்திற்கான தொழிற்பயிற்சியை இலங்கை சுற்றுலாப் பயண அதிகார சபையின் லண்டன் அலுவலகத்தில் மேற்கொண்டார்.
வெற்றிகரமாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுடன் பேசிய ஜெய், “நான் வாழும் தொகுதிக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை ஒரு பெருமிதமாக கருதுவதுடன், எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு வாக்களித்த உங்கள் நலனை கருத்தில் கொண்டு உங்கள் நலனில் அக்கறையுடன் செயற்படுவேனென்று உறுதியளிப்பதுடன், பேசிங்ஸ்டோக் மற்றும் டீன் நகர சபையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் ” என்றும் தெரிவித்தார்.
2012 முதல் கன்சர்வேடிவ் (Conservative) கட்சி உறுப்பினராக இருந்து வரும் இவர், ‘வோர்ட் லீவ்’ (Vote LEAVE) அமைப்பின் பரப்புரையாளராக இருந்து, பொறிஸ்ஸ் ஜான்சன் மற்றும் மைக்கேல் கோவ் ஆகியோருடன் இணைந்து 2016 ஆம் ஆண்டில் பிரித்தானியா ஐரோப்பிய யூனியலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸற் (BRExit) சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்காக கடுமையாக உழைத்து வந்தவரென்பது குறிப்பிடத்தக்கதாகும்.