சிரியாவிலிருந்து கடந்த நாட்களில் மாத்திரம் சுமார் 76000 ஏதிலிகள் ஐரோப்பிய எல்லைக்குள் நுழைந்திருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது. சிரிய – துருக்கிய எல்லையூடாக ஏதிலிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை தன்னால் இனியும் தடுக்க முடியாதென தெரிவித்திருக்கும் துருக்கி, அதிகரித்து வரும் சிரிய ஏதிலிகளின் வருகையை தன்னால் கட்டுப்படுத்த முடியாததாலும், சிரிய ஏதிலிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த காலங்களில் அளித்திருந்த உறுதிமொழிகளை ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றாமல் அசட்டை செய்ததாலுமே எல்லைகளை திறந்துவிடும் முடிவினை தான் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
துருக்கியின் இந்த முடிவால், துருக்கியோடு எல்லைகளை கொண்டிருக்கும் கிரீஸ், மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் சிக்கல்களை எதிநோக்கியுள்ளன. கடந்த வருடங்களில் பெருமளவில் ஐரோப்பாவுக்குள் நுழைந்த சிரிய ஏதிலிகள் இந்நாடுகளின் எல்லைகளூடாகவே ஐரோப்பாவுக்குள் நுழைந்திருந்தனர்.
இன்றைய தினம் மாத்திரம் சுமார் 10000 ஏதிலிகளை தமது எல்லையில் தடுத்து நிறுத்தியிருப்பதாக கிரீஸ் தெரிவித்துள்ளது.