ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பு!

You are currently viewing ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

சனவரி 5ம் திகதி மாலை 3 மணியில் இருந்து 5 மணிவரை பிரசல்சில் (பெல்ஜியம்) ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகளுடன் அனைத்துல ஈழத்தமிழர் மக்களவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரான்ஸ் மக்களவை, ஸ்வீடன் மக்களவை, கனடியத் தமிழர் தேசிய அவை மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களில் தமிழ் மக்களினது பேரம்பேசப்பட முடியாத அடிப்படைக் கோட்பாடுகளையும் பிற முக்கிய அம்சங்களையும்  எடுத்துரைத்தனர்.

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்கான சுய நிர்ணய உரிமை, மற்றும் தமிழ் மக்களின் பிரிக்கப்பட முடியாத பாரம்பரிய தாயகப் பிரதேசம் என்னும் முக்கிய கொள்கைகளை வரலாற்றில் தமிழ் மக்கள் ஒருமித்து தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். இவ் அடிப்படை கோட்பாடுகள் எந்த ஒரு அரசியல் தீர்வு முயற்சிக்கும் முக்கிய கருவாகவும் மற்றும் ஆரம்ப புள்ளியாகவும் அமையவேண்டும் என வலியுறுத்தி தமிழ் மக்கள் சார்பாக கலந்து கொண்ட மக்களவைப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தார்கள்.

தமிழ் மக்களும், அனைத்துலக சமூகமும் இலங்கை அரசாங்கத்தால் தெடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதால், பேச்சுவார்தைகளில் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து ஒரு சர்வதேச நடுவராக இருந்து, தமிழ் மக்களுக்கு ஏற்புடைய ஒரு தீர்வை உத்தரவாதப்படுத்தி, தீர்வினை முற்றுமுழுதாக அமுல்படுத்துவதற்குரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் எந்தவொரு அரசியலமைப்பையும் வகுக்க முனையும் முன்னர் ஓர் ஒப்பந்த வடிவில் (டேயிற்ரன்  ஒப்பந்தம் மற்றும் பெரிய வெள்ளி ஒப்பந்தம்), போன்ற அரசியலமைப்புக்கு

முன்பான ஒப்பந்தம் ஒன்று அவசியம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை, அதன் இறையாண்மை, அதற்குரிய ஆட்சி அதிகாரங்கள் ஆகியனவற்றோடு தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த அவர்களது பாரம்பரியத் தாயகம் ஆகியன அங்கீகரிக்கப்பட்டிருத்தல் அவசியமாகும் என்பதை விளக்கினர்.

மற்றும் இலங்கை அரசாங்கம் பக்கச் சார்பாக இவ் ஒப்பந்தத்தை இரத்துச் செய்தால், ஒப்பந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கச் செய்வதற்கான பிறிதேதும் சாத்தியமான வழிமுறைகள் இல்லாவிடத்து,  தமிழ் மக்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிப்பதற்கென ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கான வழிமுறைறையை இந்த ஒப்பந்தம் கொண்டிருத்தல் அவசியம் என்பதனையும் எடுத்துரைத்தனர்.

ஓற்றை ஆட்சி முறையிலான தற்போதைய அரசியலமைப்பு, ஏற்கனவே தோல்வியடைந்த மாகாணசபை முறைமை ஆகியன தமிழர் தேசிய இனத்தின் நியாயபூர்வமான அபிலாசைகளைத் தீர்ப்பனவாக இல்லை.  நாட்டின் இந்த ஓற்றையாட்சிப் படிநிலைக் கட்டமைப்பு அகற்றப்படும்வரை சமஸ்டி முறையான ஒர் அரசியலமைப்புக்கூட நடைமுறைச் சாத்தியப்படமாட்டாது என்பனவும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் பல விடயங்கள் இக் கலந்துரையாடலில் இரு தரப்பினராலும் பகிரப்பட்டது. குறிப்பாக தமிழ்த் தலைவர்கள் அதிலும் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக்கட்சிப் பிரதிநிதிகளின் ஆளுமையற்ற தூரநோக்கற்ற கருத்துக்களும் நடவடிக்கைகளையும் குறிப்பிடத் தயங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கையின் அரசியல் நகர்வுகளையும், அரசியல் வாதிகளை யும் நன்றாக புரிந்து வைத்திருப்பதும் உணரப்பட்டது. இரண்டு மணித்தியாலம் இடம்பெற்ற  ஆழமான கலந்துரையாடலில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பான அதிகாரிகள் எமது கருத்துக்களை பொறுமையாக செவிமடுத்து, இப்போது கனிந்து வரும் முக்கிய காலகட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவித்தனர்.

-தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்-

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பு! 1
ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பு! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments