ஐ.நாவினை அண்மித்துக்கொண்டிருக்கும் 16ம் நாள் (17/09/2022)மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.
தமிழீழ மண்ணில் நிகழ்ந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தியும் தமிழீழமே தமிழர்களுக்கான இலக்கு என முழங்கிய படி இன்றோடு 16 நாளாக ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தொடர்கின்றது. அரசியற் சந்திப்புக்கள் மூலம் பல முக்கிய மைங்களில் எம் வேணவாக்களினை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றோம். சிறிலங்காப் பேரினவாத அரசு தான் புரிந்த தமிழின அழிப்பில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் பல கபட நாடகங்களை நடத்தும் முயற்சி பலன் பெறாத சூழலே நிலவுகின்றது.
அதன் அடிப்படையிலே நிகழ்ந்த சந்திப்புக்களும் ஆரோக்கியமான பெறுபேறுகளையே தந்திருக்கின்றன. 51வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறிலங்காப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் (ICC) நிறுத்த நாம் அனைவரும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.
கடுமையான ஈருருளிப்பயணவழி போராட்டத்தில் மனித நேய செயற்பாட்டாளர்கள் தம் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது குளிர் மழை காற்று எனும் இயற்கையின் சவாலான கால நிலையிலும் இயங்கி வருகின்றார்கள். இன்று லவுசாண் மாநிலத்தினை வந்தடைந்த போராட்டம் ஐ.நாவின் எல்லையினை அண்மிக்க நாளை (18/09/2022) பேரெழுச்சியோடு தொடர இருக்கின்றது.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் அதி உச்ச ஈகத்தினை ஒரு கணம் எண்ணிப்பார்க்கின்றோம். எம் இலக்குகள் நிறைவேற நாம் கொண்ட போராட்ட வடிவங்களோ ஏராளம். அதுவே எம் தேசியத்தலைவரின் வழிகாட்டலும். எனவே அனைத்து தமிழ் உறவுகளும் எதிர்வரும் 19/09/2022 ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் பி.ப 14:39 மணியளவில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
- தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா.
“சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”
-தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்