ஐ.நாவில் சிறிலங்காவின் செயற்பாடு குறித்து சர்வதேச நாடுகள் கடும் அதிருப்தி

You are currently viewing ஐ.நாவில் சிறிலங்காவின் செயற்பாடு குறித்து சர்வதேச நாடுகள் கடும் அதிருப்தி

ஐநா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதையிட்டு பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மெசடோனியா ஆகிய நாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை (27) மாலை மனித உரிமைகள் பேரவையின் பிரதான மண்டபத்தில் உரையாற்றிய போதே இந்த நாடுகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தின. 

மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு சில நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது.

அப்போது உரையாற்றிய மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளின் பிரதிநிதிகளும், இணை அனுசரணையை வழங்கிய சிறிலங்கா அரசாங்கம் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமை தமக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இங்கு உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதிநிதி, 

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவையிட்டு தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின்படி பொறுப்புக் கூறல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றில் சிறிலங்கா தொடர்ந்தும் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 
பிரேரணையைக் கொண்டுவந்த பிரதான நாடுகளின் (Core Group) ) சார்பில் நான் உரையாற்றுகிறேன். சிறிலங்கா குறித்த 30/1 யோசனையின்படி நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், நட்டவீடு வழங்கல் என்பவற்றில் நான் உறுதியாக இருக்கின்றேன் என குறிப்பிட்டார்.

2015 இல் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான இந்த பிரேரணை குறித்து நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ள பின்னணியில், இந்த அலுவலகம் முன்னேற்றகரமான ஒன்றாகவே கருதப்பட்டது. 

இதற்குப் பின்னர் பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சுதந்திரமாகச் செயற்படக்கூடிய நிலை ஏற்பட்டது. அவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறைவடைந்திருந்தன. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நிலை மாற்றப்பட வேண்டும்.

அரசாங்கம் தமது செயற்பாட்டை மாற்றிக்கொண்டமை பெரும் பின்னடைவாகவே உள்ளது. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பிரேரணையை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் செயற்படுவது அவசியம். அதன்மூலமாகவே நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும்’ என பிரித்தானிய பிரதிநிதி தனது உரையின் போது வலியுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய கனடா நாட்டின் பிரதிநிதி, 

சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமைக்குக் கடும் அதிருப்தியை வெளியிட்டார். ‘நல்லிக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்துவதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணைந்து செயற்படுவது அவசியம். சிறிலங்கா சமாதான முயற்சிகளுக்கு கனடா தொடர்ந்தும் உதவும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜேர்மனி, மெசடோனியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், இணை அனுசரணையிலிருந்து சிறிலங்கா விலகிச் சென்றமை குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். 

பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா ஐ.நா.வுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

பகிர்ந்துகொள்ள