கொரோனா மோசடிகளுக்கு எதிராக ஒஸ்லோ நகராட்சி தனது முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இன்று திங்கள் காலை இடம்பெற்ற ஒரு சம்பவத்திற்குப் பின் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒருவர் தன்னை நகராட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறி, கொரோனா நோய்த்தொற்றுக்காக வேறு ஒருவரை பரிசோதிக்க விரும்பிய சம்பவத்தை நாங்கள் அறிவோம் என்று நகரசபைத் தலைவர்கள் அலுவலக தொடர்பாளர் Hanne Gjørtz கூறியுள்ளார்.
குறித்த நபர் தான் நகராட்சியைச் சேர்ந்த ஒரு சுகாதார நிபுணர் என்று கூறியுள்ளார் என்றும் இந்த மோசடி பற்றி காவற்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் Hanne Gjørtz மேலும் கூறியுள்ளார்.

“தங்களை நகராட்சியைச் சேர்ந்த சுகாதார வல்லுநர்கள் எனக் கூறி குடியிருப்பாளர்களை கொரோனா நோய்த் தொற்றுக்கான சோதனைக்கு வருமாறு கேட்டுக் கொண்ட சம்பவத்தை நாங்கள் அறிந்துள்ளோம். இவர்கள் நகராட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல, எனவே இவர்களை உள்ளே அனுமதிக்கவேண்டாம். ஒஸ்லோ நகராட்சி கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னறிவித்தல் இல்லாமல் எந்த ஒரு வருகைகளையும் செய்யவில்லை, அதேபோல் முன்னறிவித்தல் இல்லாமல் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு எந்த வீட்டிற்கும் வருகைதரமாட்டாது.” என்று முகநூல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.