ஒஸ்லோவின் பிரதான மருத்துவமனையான “Ullavål” மருத்துவமனையில் மேலும் இரண்டு பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருத்துவமனையில் மாத்திரம் மொத்தம் ஐந்து பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த மருத்துவமனையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், இத்தாலியில் கொரோனா தாக்கத்திற்குள்ளான பகுதிக்கு சென்றுவந்திருந்த நிலையில், தனது உடலில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும், அது தொடர்பான பரிசோதனைகளை தன்மீது மேற்கொள்ளுமாறும் குறித்த வைத்தியர் மருத்துவமனையிடம் கேட்டுக்கொண்டதாகவும், எனினும், பரிசோதனைகள் அவசியமில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்த வைத்தியரிடமிருந்தே வைரஸ் தாக்கம் மருத்துவமனையில் பரவ ஆரம்பித்துள்ளதாக பேசப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயத்தில் தான் பாரிய தவறிழைத்துவிட்டதாக தற்போது ஒத்துக்கொண்டிருக்கும் மருத்துவமனை, தவறுக்காக பொது மன்னிப்பும் கோரியுள்ளது.
இதேவேளை, நோர்வேயில் 17 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைந்து செல்வதாக உலக சுகாதார நிறுவனமான WHO கவலை தெரிவித்துள்ளது. எனினும், உலகநாடுகள் மிகமிக அவதானமாக இருக்கவேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.