“தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில், மிக முக்கியமானதும், ஆபத்தானதுமான தகவலொன்று எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
Groruddalen பகுதியில் வசிக்கக்கூடிய தமிழ்மக்கள் பங்குபற்றிய விளையாட்டு நிகழ்வொன்று, சட்டத்தை மீறும் விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மக்களினால் இயக்கப்படும் இரு விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட நிகழ்வொன்று ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டதாக, காவல்த்துறையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
“கொரோனா” வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது மிகமுக்கியமானது என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
“கொரோனா / கோவிட் – 19” வைரஸ் பரவலினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால சூழ்நிலையால், அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் விசேட சட்டமூலம், பிரிவு 13 இன் பிரகாரம் சகல விளையாட்டு நிகழ்வுகளும், கலாச்சார நிகழ்வுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்படாத, 5 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
“கொரோனா” வைரஸின் பரவலை கட்டுப்படுத்தி, நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக நாம் எல்லோரும் அரசாங்கத்தின் வரைமுறைகளையும், சட்டவிதிகளை மதித்து நடப்பதோடு, அவற்றை கடுமையாக கடைப்பிடிப்பதும் மிக அவசியமானது.
03.04.2020 அன்று வரையும், நோர்வே முழுவதும் 54 பேர் “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்டு மரணமாகியுள்ளார்கள். “கொரோனா” வைரஸானது, வழமையான காய்ச்சல் நோயை விடவும் இருமடங்காக வீரியமுள்ள காய்ச்சலை கொண்டுவருவதோடு, மரணமடையக்கூடிய ஆபத்தையும் 5 மடங்காக அதிகரிக்கும் வல்லமை கொண்டது.
அதனால், அரசாங்கம் விதந்துரைக்கும் சட்டவிதிகளையும், ஒழுங்குவிதிகளையும் மிகுந்த பெறுமானத்தோடும், நம்பிக்கைக்குரிய விதத்திலும் நாம் அனைவரும் கடுமையாக பின்பற்றுவது நமக்கு மட்டுமல்லாது, எல்லோருக்கும் இன்றியமையாதது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.”
Roy Cato Einarsen
(பன்முகத்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு பொறுப்பாளர்
காவல்த்துறை கண்காணிப்பாளர்
காவல்த்துறை சிறப்பு அதிகாரி
குற்றத்தடுப்பு பிரிவுத்துறை நிபுணர்
ஒஸ்லோ காவல்த்துறை Stovner பிரிவு).