ஓய்வூதிய சீர்திருத்தத்தை கண்டித்து பிரான்சில் வீதியில் இறங்கி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பிரான்சில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு புதிய விதிமுறைகளை இந்த திட்டத்துக்குள் கொண்டுவந்ததால், ஊழியர்களிடையே பெரும் நம்பிக்கையின்மை எழுந்தது. சேவை காலத்தை பொறுத்து ஓய்வூதியம் மாறுபடும், ஓய்வுபெறும் வயதுக்கு முன்பாக ஓய்வூதியம் கோரினால் ஓய்வூதிய தொகை மாறுபடும் என்பது உள்பட பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
முதலில் தொழிற்சங்கங்கள் இதை எதிர்த்து போராடிய நிலையில், தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், வக்கீல்கள், விமானநிலைய ஊழியர்கள் என அனைவரும் போராட தொடங்கினர். கடந்த மாதம் (டிசம்பர்) ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 8 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போராட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நேற்று நாடு முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பாரீசில் மட்டும் 23 ஆயிரம் பேர் போராட்டத்தில் குதித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.