கனடாவில் பல மாகாணங்களில் முன்னொருபோதும் இல்லாத வகையில் கடும் வெப்ப அலை பதிவாகி வருகின்றது. கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை டசின் கணக்காணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கனடாவில் பதிவாகும் வெப்பநிலை முன்னைய பல சாதனைகளை முறியடித்து அதிகரித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் திங்கட்கிழமை முதல் கிட்டத்தட்ட 70 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அம்மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவா்களில் பெரும்பாலோர் வயதானவர்கள். இந்த மரணங்களுக்கு கடும் வெப்ப அலையும் ஒரு காரணமாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 49.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்தது.
இந்த வாரத்துக்கு முன்னர் கனடாவில் வெப்பநிலை எப்போதும் 45 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகவில்லை.
கடும் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நபர்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கனேடியர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
வான்கூவர் புறநகர்ப் பகுதிகளான பர்னாபி மற்றும் சர்ரேயில் அண்மைய நாட்களில் 69 பேர் இறந்ததற்கு வெப்பம் ஒரு காரணியாக இருந்ததாக நம்பப்படுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் அல்லது அடிப்படை சுகாதார சிக்கல்களைக் கொண்டிருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்த வெப்பத்தைச் சமாளிக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓரளவு குளிர்ச்சியான இடங்களைத் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளரான மேகன் ஃபான்ட்ரிச் என்பவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பர்ட்டா மாகாணங்கள், சஸ்காட்செவன், வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் யூகோனின் ஒரு பகுதிக்கு கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கடும் வெப்ப அலை முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
கனடா உலகின் இரண்டாவது குளிரான நாடு மற்றும் அதிக பனிப்பொழிவு கொண்ட நாடு. நாங்கள் பெரும்பாலும் குளிரையும், பனிப்புயல்களையும் அனுபவிக்கிறோம். இதனால் வெப்பநிலை குறித்து பெரும்பாலும் கவலைப்படுவதில்லை. ஆனால் இப்போது கனடாவை விட டுபாய் குளிர்ச்சியாக இருப்பதை நாங்கள் காணமுடியும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்கள சிரேஷ்ட காலநிலை ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ் கூறினார்.
இதேவேளை, கனடாவின் அண்டை நாடான அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் முன்னோருபோதும் இல்லாத வகையில் இம்முறை கடும் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
அமெரிக்க நகரங்களான போர்ட்லாண்ட் மற்றும் சியாட்டிலின் வெப்பநிலை கடந்த 1940 ஆம் ஆண்டின் பின்னர் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
ஒரேகனில் உள்ள போர்ட்லாண்டில் 46.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் சியாட்டில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக அமெரிக்க தேசிய வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. கேபிள்கள் உருகும் அளவுக்கு வெப்பம் தீவிரமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வொஷிங்டனின் ஸ்போகேனில் உள்ள மக்கள் வெப்பத்தை சமாளிக்க அதிகளவில் வாயு சீராக்கிகளை அதிகளவு பயன்படுத்துவதால் மின்சார நுகர்வு இரு மடங்காக அதிகரித்துள்ளது என அங்குள்ள மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வொஷிங்டன் சில பகுதிகளில் பாலைவனத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.