தமிழ் கனேடியரான ஹரி ஆனந்தசங்கரி கனடா நாடாளுமன்றத் தோ்தலில் மூன்றாவது தடவையாகவும் வென்று கனேடிய பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
ரொரண்டோவின் – ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களைவ விட பெரும்பான்மையான வாக்குகளை பெற்று சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தார்.
2011 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட லிபரல் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி 34.8 சதவீத வாக்குளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் வேட்பாளர் 31.6 சதவீதம் வாக்குகளையும் என்.டி.பி. வேட்பாளர் 31 சதவீத வாக்குகளை பெற்றிருந்தனர். 2019 இரண்டாவது தோ்தலிலும் அவர் சிறப்பான வெற்றியை பதிவு செய்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தோ்தலில் அவர் மீண்டும் மூன்றாவது தடவையாக வென்று சாதித்துள்ளார்.
ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் புதல்வராவார்.
13 வயதில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஹரி ஆனந்தசங்கரி, புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றில் பல அரிய செயல்களைச் செய்தவர்.
கனடாவில் தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட வன்முறை சார்ந்த ஒரு கலாச்சாரத்தை அழிப்பதற்கான கனடிய தமிழ் இளைஞர்கள் சேவை நிலையத்தை ஆரம்பித்து கனடாவில் தமிழ் இளைஞர்களின் முரண்பாடுகளைத் தீர்க்கப்பாடுபட்டவர்.
அதேபோல கனடாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான பங்களிப்பை வழங்கியவர்.
இதற்கும் மேலாக கனடியத் தமிழ்க் கொங்கிரஸ் என்ற அமைப்பின் வளர்ச்சிக்கான பொருளாதார உதவுனராக இருந்தவர்.
மனித உரிமை வழக்கறிஞரான ஹரி ஆனந்தசங்கரி, சிறப்பான அரசியல்வாதியாகவும் பெயர்பெற்றுள்ளார்.
லிபரல் கட்சி தலைவராக ஜஸ்ரின் ரூடோவை தேர்வு செய்வதிலும் ஹரி ஆனந்தசங்கரி தீவர பங்காற்றியவர்.
ஹரி ஆனந்தசங்கரி மூன்றாவது முறையாகவும் கனடா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானமை புலம் பெயர் தமிழ் சமூகத்தினரிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் வாழும் தேசங்களில் அரசியல் ரீதியில் நிலைநாட்டிவரும் சாதனைகளில் ஹரி ஆனந்தசங்கரியின் சாதனையும் குறிப்பிடத்தக்கதாகும்.