கரிநாள்

You are currently viewing கரிநாள்

பிருத்தானியரின்
பெரும் சூழ்சிதான்
ஒருமித்த இலங்கையில்
ஒற்றுமையோடு வாழ்தலென
பெரும்பான்மையினருக்கு
கீரிடம் தரித்த செயல்!

தமிழரின் மண்ணை
ஒற்றை இலங்கையில்
விற்று ஏப்பம் விட்டு
சுயநிர்ணய உரிமைக்கு
சங்கூதி
சதிவலையுக்குள்
இழுத்து வீழ்த்தி
எழுபத்திரெண்டு ஆண்டுகள்
உருண்டு ஓடிவிட்டது!

அன்று
தொடங்கிய அவலம்
இன்றுவரை
நீள்கிறது!

அதிகார அத்துமீறல்களின்
அகோரக்கரங்களில்
தமிழன்னையின்
சிரம் சிக்குப்பட்டு
மூச்சுவிடுவற்காய்
முப்பது வருடங்கள்
சனநாயக போர் புரிந்து
மனிதநேய சாசனம்
எரிக்கப்பட்டது!
இரும்புக்கரம் கொண்டு
அடக்கப்பட்டது!
அதனால்
இரும்புக்கரம்கொண்டு
இருதய பூமியை மீட்க
பிரபாகரன் சேனை
எழுந்தது!
முப்பது வருடங்கள்
தொப்புள்கொடி அறுந்து
போகாது
காப்பாளராய் அவர்கள்
சிரம் நிமிர்ந்தது!

என்ன செய்வது
1948 இல்
மலர்ந்த துரோகம்
இன்றுவரை
துளிர்கொண்டு
இருப்பதன் சாபம்
பல்லாயிரக்கணக்கில்
தியாகமரணமெய்திய
மாவீரர் கனவுக்கும்
உயிர்க்கொடைக்கும்
தடைக்கற்களாய்
வழியெங்கும்
பரந்து கிடக்கிறது
துரோகத்தின்
வடுக்கள்!

பூமியின் சுழற்சியில்
புலரும் இந்நாள்
தமிழரின் வாழ்வில்
கலையாத இரவுகளாய்
கடக்கிறது!

ஆம்
சிறீலங்காவின் விடுதலைநாள்
கறைபடிந்த நாளாக கண்துறக்கிறது!

தமிழ்மண்ணின் கறுப்புநாளாக
வெறுப்பில் வீழ்கிறது!

இனத்தின் இரத்தம்
தோய்ந்த நாள்
மானத்தமிழனுக்கு
நெருப்புநாள்!
ஆனால்
ஈனத்தமிழனுக்கு
செருப்புநாள்!
இதையும்
காலம்
நமக்குரைத்து
போகிறது!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள