இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலைகள், தாக்குதல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நியாயமான விசாரணையையும் நீதியையும் வலியுறுத்தி ‘கருப்பு ஜனவரி’ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை 6.00 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்று.
போராட்டத்தில் பங்குகொண்ட ஊடகவியலாளர்கள், படுகொலைச் செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயமான நீதியை வழங்குவதன் அவசியம் மற்றும் முறையான விசாரணையின் அவசியத்துவத்தை எடுத்துத்துரைத்தனர்.
கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட, படுகொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சண்ட லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, சிவராம், நிமலராஜன் உட்பட படுகொலைச் செய்யப்பட்ட மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை ஏந்தி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாலை 6.00 மணிமுதல் 7.00 வரை நடைபெற்றது.
அத்துடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர்கூடத்தில் நேற்றுமுன்தினம் பி.ப. 3.30 மணித்தொடக்கம் மாலை 5.30 மணிவரை ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நியாயமான நீதியை வலியுறுத்தும் கருத்தாடல்கள் நடத்தப்பட்டதுடன், விசாரணைகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தாமத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உரிய விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவுசெய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்தே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கருத்தாடல் மற்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், சுதந்திர ஊடகவியளாளர் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இளம் ஊடகவியலாளர் ஒன்றியம், சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரம் உட்பட பல ஊடகவியலாளர் சங்கங்கள் கலந்துகொண்டன.
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுகூரும் நோக்கில் “கருப்பு ஜனவரி” என்ற பெயரில் தலைநகர் கொழும்பில் கவயீர்ப்பு போராட்டம் ஊடகச் சங்கங்களால் நடத்தப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.