ஆயிரம் ஆயிரம்
இடர்கள் இதயத்தின்
உட்பரப்பில் படர்ந்து
கடந்து போனாலும்
ஒரு இனத்தின் ஜீவிதம்
நெருப்பு குண்டுகளாலும்
இரும்புப் பறவைகளாலும்
எரிக்கப்பட்ட ஏக்கத்தின்
வலிகளில் இருந்து
மீளமுடியாமல்
மிதிபட்ட புழுவாய்
அழுகிறது மனம்!
எப்படி எப்படி அந்த
கொடிய நாட்களை
எளிதில் அழித்துவிட்டு
சுழியத்திலிருந்து நாளிகைகளை
நகர்த்தமுடியும்!
முடியாது முடியாது
அடிமுடியெல்லாம்
சாகாவரமாய் அகத்திடை
தகித்துக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்கான இருப்பின்
தீம்பிழம்புகளின் நுணியில் நின்று
எம் ஆன்மா அழித்தவனை
சபித்துக்கொண்டிருக்கிறது!
அவனின் அழிவுகளை கண்முன்னே
காணத்துடிக்கும் மனிதத்தை கடந்த
மானிடனாய் மனம் தீக்குளம்பாய்
வியாபித்துக்கொண்டிருக்கிறது!
எம்மை மன்னித்துவிடுங்கள்
ஓடிவந்த குற்றத்திற்காய்
சர்வதேச தெருக்களில் ஒப்பாரி
மட்டும்தான் எழுப்பமுடிந்தது!
பதினொரு ஆண்டுகள் ஆகியும்
கையறுநிலையில் கால்கள் போகிறது!
அழிவின் விழிம்பில் தப்பிய சிலர்
கடவுள் காப்பாற்றிவிட்டாரென
ஒவ்வொரு வருடமும் பொங்கித்
திளைக்கிறார்!
அழிந்துபோனவர் ஆன்மாக்களோ
நீண்ட கனவுகளில் நிலைத்து இருக்கிறார்!
ஒழிந்து திரிபவர் இன்னும் அகம் காட்ட மறுக்கிறார்!
வழிந்து திரிபவர் வாழ்த்துப்பா பாடியே கொல்லுறார்!
வலிந்து காணாமல் போனோர் உறவுகள் தெருக்களில் இருக்கிறார்!
பிரிந்து கிளைதாவும் மந்திகளாய்
இன்னும் சிலர் நிலைக்கிறார்!
இத்தனை துயரங்களையும் கடந்து
இதயத்தில் புரையோடிய கனவுகள்
கரைதேடும் படகாய் புயலொன்றில் அகப்பட்டபடியே
மெல்ல மெல்ல நகர்கிறது
ஆனால்
கரைதொடும் என்ற நம்பிக்கையின்
துடுப்பு மட்டும் ஓயவில்லை!
✍தூயவன்