கல்லறைக்கு திலகமிடுவதே என் கடன்….

You are currently viewing கல்லறைக்கு திலகமிடுவதே என் கடன்….

பச்சைத்தாவணி கட்டிய நிலத்தின்
சிரிப்பிலே
பூத்துக்குலுங்கும் ஆனந்தமாய்
நிலவெறிந்த ஒளியிலே
வெள்ளாப்புக்காற்று
பனிச்சாரலின் சுகமாய்
மேனியுரசிப்போகும்!

தாயின் கருவறையில்
இனம்புரியாத மகிழ்வினிலே
உன் முகத்தினை கண்டதும்
திண்ணையிலே விளையாடி
நட்சத்திரங்களை
எண்ணித்திளைத்த இன்பத்தை
எனக்குள்ளே விதைத்து நிற்கும்!

ஒரு நிலவுக்கு திலகமிட்டு
இளம்பிறைகளை ஈன்றெடுத்து
முதுமைக்காலத்தில்
முழுநின்மதி கிடைக்குமென
தயாய் தவமிருந்தேன்!

ஆனால்
எழில் பூத்த எம் வான்கிழிய
பொன்மின்னிய பூமி
வானரங்களின் குண்டுமழையால்
கருகியொழிய
உருகி உருகி உனக்குள் ஏறிய வீரம்
பெரும் விளைச்சலின் விதையாய்
விதைத்ததடா!

சிறுகச் சிறுகச் சேர்த்த
என் சுய விருப்புக்கள்
ஒரு புயலாய் புறப்பட்டுப்
போனதடா!

ஆண்தாயின் அணையாக்
கொள்கையில்
அறநெறிதவறாப் பிள்ளையாய்
அடைகாத்து
நின்றாயடா!

உன் தீரம் கண்டு
விதிர் விதிர்த்துப்போனேன்!

இனி
இந்த வீரம் விளைஞ்ச பூமியில்
இத்தனை நாட்கள்
இருந்ததை
மகப்பேறாய்
உணர்கிறேன்!

நிலவுக்கு திலகமிட
நினைத்த
என் உணர்வுகள்
இனி
உன் கல்லறைக்கு
திலகமிடும்!

✍️தூயவன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply