வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகிய இப்பேரணி, பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து, மீண்டும் பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜனாதிபதியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் ‘இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நீதியா?’, ‘கணவன்மாரை கையளித்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியவாறு உறவுகள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், தமிழ் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் சுகாஸ் மற்றும் ஐந்து மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் தலைவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.