காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம் எதற்காக?

You are currently viewing காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம் எதற்காக?

கடந்த வாரம் (ஓகஸ்ட் முதலாம் திகதி) தமிழ்நாட்டிலிருந்து உணர்ச்சிக்கவிஞர் திரு. காசி ஆனந்தன் தலைமையில் இணைய வழியாக நடத்தப்பட்ட மாநாடு, அங்கு முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஆகியவை தொடர்பாக பல்வேறு கருத்துகள் இணையவெளியில், சமூகவலைத்தளங்களில் பகிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அவசர அவசரமாக நடத்தப்பட்ட இம்மாநாட்டில் நடந்தேறிய சம்பவங்களைக் காட்டிலும்  அங்கு முன்வைக்கப்பட்ட தீர்மானம்பற்றியும் அது எதற்காக நிறைவேற்பட்டது என்பதுபற்றியும் எமது கவனத்தைத் திருப்ப வேண்டியது அவசியமாகிறது

காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம் எதற்காக? 1

இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு என்ற தம்மை அழைத்துக்கொள்ளும் ஒரு சிறுகுழுவினர் காசி ஆனந்தனை முன்னிறுத்தி இம்மாநாட்டை ஒழுங்கு செய்ததாகத் தெரியவருகிறது. அம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியவர்களில் பலரும் தமக்கு இம்மாநாட்டுக்கோ, அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கோ எதுவித தொடர்பும் இல்லை எனவும் காசி ஆனந்தன் அழைத்ததனால் தாங்கள் கலந்துகொண்டு உரையாற்றியதாகக் கூறியிருக்கிறார்கள்.  காசி ஆனந்தன் தவிர வேறு யாராவது இக்குழுவில் இருக்கிறார்களா என்பது வெளிப்படுத்தப்படாத நிலையில்,  இங்கு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ‘காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம்’ என்று  அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

இரண்டு பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் இத்தீர்மானமானம் பற்றிய ஆவணம், “இலங்கையின் இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் தலையீடு காலத்தின் உடன் தேவை என்பதும் – இந்திய அரசு காலம் தாழ்த்தாமல் தலையிட வேண்டும் என்பதும் இரண்டாம் வட்டுக் கோடடைத் தீரமானத்தின் நோக்கமாகும்”  என ஆரம்பிக்கிறது. தொடர்ந்து, வட்டுக் கோட்டைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கான வரலாற்றைப் பற்றிய சிறுகுறிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.  நடப்பு நிலவரமாக, “ஊர் வளர்ச்சித் திட்டங்கள் என்னும் போர்வையில் சிறிலங்கா அரசு தமிழர் நிலப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் இடங்களில் சீனர்கள் தொழில் நிறுவனங்களை அமைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தின் முக்கிய கருப்பொருளாக, “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கூறப்பட்ட ‘தன்முடிபுரிமை’ (Self determination) அடிப்படையிலான தீர்வைப் பெற்றுத்தர இந்திய அரசை மீண்டும் வேண்டுகிறோம்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும்  1976ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை அதுபோன்று புதிதாக எதும் சேர்க்கப்படவில்லை. ஆகவே இத்தீர்மானத்திற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் உள்ள ஒரே ஒரு தொடர்பு தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற வகையில் உள்ள சுயநிர்ணய உரிமை மாத்திரமே.


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முன்மையான விடயமாக,

“தேசங்களுக்குரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்,  சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற, சோசலிச தமிழ் ஈழத்தை உருவாக்குவதுதான் இந்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்” என்று முடிந்த முடிபாக  வலியுறுத்தப்பட்டுள்ளது.

This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of TAMIL EELAM, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் குறிப்படப்படும் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை சுட்டிக்காட்டி அதனடிப்படையில் ஏதாவது ஒரு தீர்வினை இந்திய ஒன்றிய அரசிடம் இரந்து  கேட்பதுதான் காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம்.

ஒரு தேசத்திற்கு உரிய சுயநிர்ணய உரிமை என்பது தமது அரசியற் தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் உரிமை. இன்னொரு வெளித்தரப்பிடம் சென்று  ‘ஏதாவது பார்த்து செய்யுங்கள்’ என்பதுபோன்று இரந்து கேட்பதல்ல சுயநிர்ணய உரிமை. இதற்கு மாறாக சுதந்திர தனியரசு உருவாவதற்கு உதவுங்கள் என்று கேட்டிருந்தால் இது வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு அமைவான ஒரு முயற்சி என ஏற்றுக்கொள்ளலாம்.

வட்டுக் கோட்டை தீர்மானத்தில் முதன்மையான விடயங்களில் ஒன்று மதசார்பற்ற நாட்டை உருவாக்குவது என்பது. அண்மைக்காலமாக காசி ஆனந்தன் ‘இந்து தமிழீழம்’ பற்றிக் கூறிவருவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீறும் செயலாக அமைந்திருக்கிறது என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.

இவ்விடத்தில், நீண்டகாலமாக தமிழ்மக்களின் கோரிக்கையாக இருக்கிற தனிநாட்டுக் கோரிக்கையை நிறைவேற்ற உதவுமாறு இந்திய ஒன்றிய அரசை அவசர அவசரமாகக் கோருவதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது. 

மாநாட்டில் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், இந்திய ஒன்றிய அரச பிரதிநிதிகளே இவ்வாறு ஒரு மாநாட்டைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரியதாகவும் அவ்வாறு ஒரு தீர்மானத்தை முன்வைத்தால் அதனை சில மாதங்களில் நிறைவேற்றித் தருகிறோம் என உறுதியளித்தாகவும், காசி ஆனந்தனுடன் தொடர்புகளைப் பேணிவருபவர்களிடமிருந்து அறியக்கிடைக்கிறது.

காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம் எதற்காக? 2


இந்திய ஒன்றிய அரசினால் இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டாதா இல்லையா என்பதனையிட்டு ஆராய்வதற்கு முன்னர், இந்தியாவுடன் இவ்வாறு உறவு வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.

இனப்படுகொலையில் முடிந்த இறுதியுத்தத்தின்போது இந்தியா சிறிலங்கா அரசிற்கு உதவி வழங்கியது என்பதும், இந்தியாவின் போரைத் தாம் செய்து முடித்தோம் என இராஜபக்ச சகோதரர்கள் இந்தியாவில் வைத்தே கூறியதும் அனைவரும் அறிந்த தகவல்கள். அத்தகைய இந்திய அரசுடன் தொடர்புகைளப் பேணுவதில் எந்தத் தவறும் இல்லை. அதுவே சரியான அரசுறவியல் சார்ந்த போக்காகவும் இருக்கும். தாயகத்திலிருந்து செயற்படும் தமிழ் அரசியற் தரப்புகளுடனும், புலம்பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் அமைப்புகளுடனும் இந்தியா தொடர்புகளைப் பேணிவருகிறது. இவ்வமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிவருகிறது. இந்நிலையில் இந்திய அரசின் எதிர்பார்ப்பு ஒன்றும் இரகசியமான விடயமில்லை.

தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு சிறிலங்காவிற்கு அழுத்தம்கொடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டகவேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பாகவுள்ளது. வெவ்வேறு தமிழ் அரசியற் தரப்புகளுடன் நடத்திய சந்திப்புகளில் இந்திய அதிகாரிகள் இதனை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், காசி ஆனந்தன் குழுவினரோ சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியற் தீர்வினைப் பெற்றுத்தருமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம் எதற்காக? 3

இந்தியா தமது நாட்டில் உள்ள எந்தவொரு தேசிய இனத்தினதும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை. அவர்களை இறைமையுள்ள தேசங்களாகவும் அங்கீகரிக்கவில்லை. ஜம்மு காஸ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளையும் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் அண்மையில் நீக்கியது. இந்நிலையில், அண்டை நாடான இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு சுயநிர்ணய அடிப்படையில் தனிநாடு அமைப்பதற்கு உதவுமாறு காசி ஆனந்தன் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைப்பதற்கு காசி ஆனந்தன் அவர்கள் அரசியல் தெரியாத ஒரு கத்துக்குட்டி அல்ல. ஏறத்தாள அறுபது வருடகால அரசியல் அனுபவம் அவருக்கு இருக்கிறது. அவரைப்போன்று முன்னணி அரசியற்கட்சி ஒன்றிலும், விடுதலை இயக்கம் ஒன்றிலும் இணைந்து செயற்பட்ட இன்னொருவர் இருப்பதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக இந்திய அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்திய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. புவிசார் அரசியல் பற்றிய புரிதலும் அவருக்கு இல்லாதிருப்பதற்கு எந்த நியாயமுமில்லை. இத்தீர்மானத்தில் தாயகத்திலுள்ள எந்த அரசியற் தலைவரும் கையொப்பமிடமாட்டார் என்பதும் அவர் அறியாததல்ல. அவ்வாறாயின் அவர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்?

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவிற்கு வழங்கப்படவிருந்த கொழும்புத் துறைமுக கிழக்கு கொள்கலன் நிறுத்தம், திருகோணமலை எண்ணைக் குதங்கள் போன்றவற்றை வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்துவிட்டது. ஆனால்  இவற்றுக்குப் பதிலாக வேறு மாற்றீடான பொருண்மிய நிலையங்கள தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் கொழும்பின் கவனத்தை புது தில்லி பக்கம் திருப்புவதற்கான ஏற்பாடாகவே இந்த மாநாட்டை இந்திய ஒன்றிய அரசு பயப்படுத்திக் கொண்டது. இம்மாநாட்டில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் வானதி சிறினிவாசனும் கலந்துகொள்வதாக இருந்தது. அவர் கலந்துகொள்ள முடியாமையினால் அவரது செய்தி அங்கு வாசிக்கப்பட்டது. தவிரவும் வானதி சிறினிவாசம் தமிழீழ மக்களின் அரசியலில் மிகுந்த அக்கறை கொண்டவர் என காசி ஆனந்தன் அவரை மாநாட்டில் அறிமுகப்படுத்தினார். ஆகவே ஆளும் அரசாங்கத்தின்  இந்திய மண்ணில் விடுதலைப்புலிகளும், அவர்களுக்கு ஆதரவான சக்திகளும் ஒருங்கிணைகிறார்கள் என்ற செய்தியை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சொல்வதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாக அமைந்தது. அவ்வாறு ஒருங்கிணையும்போது அவர்களை தாங்கள் கட்டுப்படுத்துவதா அல்லது எண்பதுகளின் ஆரம்பத்தில் நடந்துகொண்டதுபோன்று அவர்கள் செயற்படுவதற்கு தாம் அனுமதிப்பதா? என்பதுதான் புதுதில்லி கொழும்பைப் பார்த்து கேட்கிற கேள்வியாக அமைந்திருக்கிறது.  இதுவே அவர்களது பேரம். இதற்கு கொழும்பு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது இன்னும் சிலமாதங்களில் தெரிந்துவிடும். ஆனால் இந்திய நலனுக்காக தமிழர்கள் மீண்டும் பலியாக்க முனைவதும், அதற்கு சில தமிழ் முகவர்கள் கொம்பு சீவுவதும் தெரிகிறது.

-கோபி இரத்தினம்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply