ஆஸ்திரேலியாவின் தெற்கு சவூத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்த காட்டுத் தீயின் தாக்கம், தற்போது மெல்ஃபோர்ன் நகரை எட்டியுள்ளது. மூன்று மாநிலங்களில் கட்டுப்பாட்டை இழந்து தீ பரவி உள்ளது. சில பிராந்தியங்களில் நிலைமைகள் மோசமடைந்து உள்ளன.
காட்டுத் தீயின் தாக்கத்தை தொடர்ந்து மெல்ஃபோர்ன் புறநகர் பகுதியை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
என்.எஸ்.டபிள்யூ / விக்டோரியா எல்லை நகரமான ஆல்பரிக்கு அருகே தீயை அணைக்க முயன்ற தன்னார்வ தீயணைப்பு ஆர்வலர் சாமுவேல் மெக்பால் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். என்.எஸ்.டபிள்யூ நகரமான கோபர்கோவில் ஒரு தந்தையும், மகனும் தீக்கு பலியானதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பண்டோராவில் உள்ள 2 பல்கலைக் கழகங்களில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக விக்டோரியா தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீக்கு பல வீடுகள் தீக்கிரையாகி வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் குண்டுகளை வீசி, தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விக்டோரியாவின் கிழக்கு கிப்ஸ்லேண்டில் ஒரு கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர்.
விக்டோரியாவின் கடலோர நகரமான மல்லக்கூட்டாவில் ஒரு பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டதால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரையில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவ ஹெலிகாப்டர்களால் மீட்கப்பட்டு உள்ளனர். மல்லக்கூட்டாவில், வானம் ஆழ்ந்த சிவப்பு நிறமாக மாறி உள்ளது.