காணாமல்போனரது உறவுகளை பின்தொடரும் இராணுவம்?

You are currently viewing காணாமல்போனரது உறவுகளை பின்தொடரும் இராணுவம்?

காணாமற்போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் தகவல்கள் திரட்டப்படுவதுடன், கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, வழக்கமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர பாதுகாப்பு படையினரோ புலானாய்வுப் பிரிவினரோ எந்தவொரு நபரையோ அல்லது குறிப்பிட்ட குழுக்களையோ கண்காணிக்கும் நடவடிக்கையில் ஒரு போதும் ஈடுப்படவில்லை என கூறியுள்ளார்.
காணாமற்போனோரின் குடும்பத்தினரை இலக்கு வைத்து எந்தவொரு கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் பாதுகாப்பு படையினரோ காவல்துறையினரோ ஈடுப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, பாதுகாப்புத் தரப்பினரும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனரே தவிர இலங்கையிலுள்ள எந்தவொரு தரப்பினரையோ குழுவினரையோ இலக்கு வைத்து செயற்படுவதில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் போன்ற சம்பவங்களைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டும் தேசிய பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையிலும் எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வழிகாட்டலில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கமால் குணரட்ன கூறியுள்ளார்.
மேலும், இதுவரை செயலிழந்து போயிருந்த புலனாய்வு வலையமைப்பு தற்பொழுது பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள