காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்து கொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்ஷவே வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த அமைச்சர் 9.30 மணிக்கு நடமாடும் சேவையை ஆரம்பித்துவிட்டு, மாவட்டச் செயலகத்திலிந்து தப்பி வெளியேறினார். இதனை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்துக்குள் நுழைந்து போராட்டம் மேற்கொண்டனர்.
அதனையடுத்து காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டு, கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் குறித்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மன்னாரில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்திற்கு முன்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ், மன்னார் பொது அமைப்பு ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் என பலர் கலந்து கொண்டனர்.
நீதி இல்லாத நாட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் எதற்கு?, ஓ.எம்.பி.அலுவலகமே மன்னாரை விட்டு வெளியேறு என்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர். மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அவர்கள் கண்டனம் வெளியிட்டனர்.