காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த குழுவினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கடந்த 30 வருடங்களாக வலி வடக்குப் பகுதியில் விடுவிக்கப்படாமல் இருக்கும் ஏனைய மூவாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், மக்கள் அவர்களுடைய சொந்த காணிகளில் குடியமர்த்தி அரசாங்கம் அவர்களுக்கு வீட்டு திட்டத்தினை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இந்த அமைதி முறையான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மயிலிட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தம்மை தமது குடியேற்ற நிலங்கள், விவசாய நிலங்களில் இருந்து வெளியேற்றி விட்டு, இராணுவத்தினர் எமது பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி எம்மை மீள் குடியேற அனுமதிக்கவில்லை.
எமது பிரதேசத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயங்களினுள் உள்ளது. இதனால் விவசாயிகளான நாம் விவசாயங்களை மேற்கொள்ள முடியாது, கடந்த 30 ஆண்டு காலமாக எமது வாழ்வாதாரங்களுக்காக வேறு தொழில்களிலையே ஈடுபட்டு வருகிறோம். நாம் விவசாயங்களை மேற்கொண்டு வாழ்வாதரத்தை மேம்படுத்த ஏதுவாக எமது காணிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும்.
அதேவேளை எமது குடியேற்ற நிலங்களும் உயர் பாதுகாப்பு வலயங்களினுள் உள்ளமையால், நாம் தொடர்ந்தும் வாடகை வீடுகள், உறவினர்கள் வீடுகளில் வாழ்கின்றோம்.
அத்துடன் எமது காணிகள் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளமையால் நிரந்தர வாழ்விடங்கள் இன்றி உள்ளோம். இதனால் வீட்டு த்திட்டங்கள் உள்ளிட்ட அரசாங்க உதவிகளை பெற முடியாத நிலைமையில் உள்ளோம். எனவே எமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்கள்.