இலங்கையின் தென்பகுதியில், காலிமுகத்திடல் உட்பட, ஏனைய இடங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்கள், அரசுக்கு ஆதரவான கும்பல்களால் தாக்கப்பட்டுள்ளதோடு, போராட்டக்காரர்கள் ஆங்காங்கே அமைத்திருந்த தற்காலிக கொட்டகைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கும், போராட்டத்தை குழப்பும் வகையில் அடாவடிகளில் இறங்கிய அரச ஆதரவு குழுக்களுக்குமிடையில் அடிதடிகள் ஏற்பட்டதையடுத்து அங்கு காவல்துறையும், இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, காலிமுகத்திடலில் பெருமளவிலான இராணுவத்தினர் கனரக ஆயுதங்களோடு குவிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவும் களத்தில் நிற்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காலிமுகத்திடலில் கலவரங்கள் நடப்பதை நேரில் அவதானிக்கச்சென்ற எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ, அங்கு நிலைகொண்டிருந்த காடையர்களால் விரட்டியடிக்கப்படும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கொழும்பின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு, பின்னதாக நாடு முழுவதற்குமானதாக மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.