கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இன்று காலை கொலைச் சந்தேக நபர் ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியிலும் வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆனந்த நகர் பகுதியில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
கிராமத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த வீட்டுக்கு சிலரால் பெற்றோல் வீசி தீ வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபருக்கும் கிராமத்தில் இருந்த சிலருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த பொருட்களை ஏற்ற குடியிருந்தவர் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த சிலர் வீட்டுக்கு தீ மூட்டியதாக கிராமத்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் குடியிருப்பாளர் தாக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை அவரை காணவில்லை எனவும், தேடி வருவதாகவும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தீக்கிரையான வீடு அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.