கிளிநொச்சியில் 106 சிறுமிகள் வன்புணர்வு! – மருத்துவ அறிக்கை கிடைக்காமையால் தப்பிக்கும் குற்றவாளிகள்!

You are currently viewing கிளிநொச்சியில் 106 சிறுமிகள் வன்புணர்வு! – மருத்துவ அறிக்கை கிடைக்காமையால் தப்பிக்கும் குற்றவாளிகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடைக்கப் பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்பனவற்றில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

சட்ட மருத்துவ அதிகாரிகள் மாற்றலாகிச் சென்றமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்கள் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை வழங்கப்படவில்லை. அந்த அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இதன் காரணமாக சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கை தொடர முடியாத நிலைமை இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, “எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். எனவே 31 ஆம் திகதி முன்னர் அனைத்து அறிக்கைகளும் கிடைக்கப் பெறும்” என்று அவர் பதிலளித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments