வெளிநாட்டில் இருந்து பெறுமதியான பொருள்கள் வந்துள்ளன என்றும், அவற்றைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் பொய்கூறி மோசடி செய்த ஒருவர் சிறீலங்கா காவல்த்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த நபர் சுமார் 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபாவரை இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது சிறீலங்கா காவல்த்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி, திருமுறிகண்டியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து பெறுமதியான பொருள்கள் வந்துள்ளன என்றும், அவற்றைப் பெறுவதற்கு குறிப்பிட்டதொரு தொகையை வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட வேண்டும் என்று அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.
அதன்பின்னர், திருமுறிகண்டியைச் சேர்ந்த பெண் சுமார் 10 லட்சத்து 85 வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட்டுள்ளார். அதன்பின்னர் தொலைபேசியில் உரையாடிய பெண்ணின் தொடர்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பாக கடந்த செப்ரெம்பர் மாதம் காவல்த்துறை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணகைள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் கொழும்பு, தெமட்டகொடவில் வைத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
வெளிநாட்டில் இருந்து பெறுமதியான பொருள்கள் வந்துள்ளன என்று தெரிவித்தும், பரிசுத் தொகை கிடைத்துள்ளது என்று தெரிவித்தும் பண மோசடி செய்யும் சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் முன்னரும் பல தடவைகள் நடந்துள்ளன. அதனால் இவ்வாறானவர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.