கிளிநொச்சி கிராஞ்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள பொன்னாவெளி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக 41ஆவது நாளாக அப்பகுதி மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே தனியார் நிறுவனங்களால் இப்பகுதியில் அமைக்கப்பட்ட 40க்கு மேற்பட்ட கிணறுகள் மற்றும் குடிநீர் செயற்றிட்ட வேலைகளாலும் மக்கள் குடிநீரின்றி அவதிப்படுவதாக கூறும் அப்பகுதி மக்கள், தற்போது சீமெந்து தொழிற்சாலைக்காக அப்பகுதியில் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெறுகிறது; இதனால் நன்னீர் உவர் நீராக மாறி வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் வசதியின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் 40 நாட்களுக்கு மேலாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்கள் மற்றும் கிளிநொச்சி அபிவிருத்திக் குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட பலருக்கு தெரியப்படுத்தியபோதிலும், இதுவரை தங்கள் பகுதிக்கு அரச அதிகாரிகளோ அமைச்சர்களோ கிராம அலுவலரோ யாரும் வந்து சந்திக்கவில்லை; இதுவரை தங்கள் முறைப்பாடுகளுக்கு சாதகமான பதில் வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேற்று (12) மாலை குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்ததுடன், இப்போராட்டம் தொடர்பாக மக்களின் நிலைப்பாடு குறித்தும் அறிந்துகொண்டனர்.
எனினும், குறித்த பிரதேச மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுவது, குடிநீரின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.