குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களை தூண்டிவிடுகின்றன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த மாதம் 30-ந் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. 7-ந் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது. 4வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில், தும்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களை தூண்டிவிடுகின்றன. இந்தியாவுக்கு தப்பிவந்து அகதிகளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச சிறுபான்மை சமூகத்தினருக்கு மரியாதை செலுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டங்களை ஆதரிக்கின்றன.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் புயலைக் கிளப்பின. குடியுரிமை திருத்தம் தொடர்பான வன்முறை சம்பவங்களுக்கு காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அமைதியான ஆதரவை அளித்து வருகின்றனர்.
ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சியினர் மக்களின் துன்பங்களை பற்றி கவலைப்படவில்லை. ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சிகள் தங்களின் குடும்பத்தினருக்கு பங்களாக்கள் கட்டிக்கொண்டனர்.
அசாமில் வன்முறையை புறக்கணித்து தற்போது அமைதிக்கு திரும்பிய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
இவ்வாறு மோடி பேசினார்.