கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன்!!

You are currently viewing கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன்!!

தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் கொழும்பில் நடந்தது.

இதன்போது,எம்.ஏ.சுமந்திரனிற்கு,இரா.சம்பந்தன் மேற்படி ஆலோசனையை வழங்கினார்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர்.

அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன.

இந்த நிலையில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரத்தை முதன்மையானதாக விவாதிக்கவில்லை.

பொதுத்தேர்தல்,புதிய அரசுடன் பேச்சு,புதிய இந்திய தூதர்,ஜனாதிபதி, பிரதமருடன் பேச்ச,அரசியல் கைதிகள் விடயம் என்பன பற்றி ஆராயப்பட்டது.

முக்கியமாக,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து அரசியல் கைதிகள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அது குறித்து விவாதிக்கப்பட்டு,இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் அரசுடன் உடனடியாக இது பற்றி பேசுவதென முடிவாகியிருந்தது.

இந்த நிலையில் இன்றைய சந்திப்பிற்கு எம்.ஏ.சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார்.

சுமந்திரனை பதவிவிலக்க வேண்டுமென நாம் தனிப்பட்ட காரணங்களிற்காக வலியுறுத்தவில்லை,ஆனால் அவராக கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை துறக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.அவர் திடீர் உடல்நலக் குறைவிற்குள்ளாகியுள்ளார்.

இன்றைய சந்திப்பில்,சுமந்திரனை பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை.

ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து,மக்களின் உணர்வுகளை புரிந்து பேச வேண்டுமென மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன்,சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாக குறிப்பிட்டார்.

அந்த பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமென பரவலாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும்.
மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும்,இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும்.

அனைவரும் தவறுகளை புரிந்து கொண்டு, முன்னோக்கி செல்ல வேண்டும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

செல்வம் அடைக்கலநாதனின் உடல் தேறியதும்,அடுத்த வார இறுதியில் மீண்டும் கூட்டமைப்பு கூடுவதென முடிவாகியது.

பகிர்ந்துகொள்ள