கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனிதப் பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப் பற்றுணர்வில் ஒன்றித்துப் போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்து கொண்ட அனுபவத்தில் ஒருவரையயாருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்ந்த நேயம் அது * தமிழீழத் தேசியத் தலைவர்
1979இன் தொடக்கக் காலப் பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித் தளமிட்ட காலம். இக்காலகட்டத்தில்தான் கிட்டு விடுதலைப் போராளியாக வளர்ச்சி பெற்றார். இவரின் இயற்பெயர் சதாசிவம் கிருஷ்ணகுமார். வெங்கிட்டு என்பது இயக்கப் பெயர். பின்னாளில் தமிழீழ மக்களால் கிட்டு என்று செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டு தலைவரிடம் நேரடியாகப் போரியலைக் கற்றார். கிட்டு வேகமும் விவேகமும் உள்ள துடிப்புமிக்க இளைஞர்.
1983 மார்ச் 04 அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக அணி ஒன்று சென்றது. அதில் கிட்டுவும் ஒருவர்.
வீதியில் நிலக்கண்ணி வெடிகளைப் பொருத்திவிட்டுப் பகைவனின் வரவை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். சிங்களப் படை வண்டிகள் வருகின்றன. அவை நெருங்கும் நேரத்தில் ஆட்டுக்குட்டி ஒன்று எதிர்பாராமல் ஓடிவந்து கண்ணிவெடியை மிதித்து வெடிக்கச் செய்து விடுகிறது. வெடித்த மறுகணமே சிங்களப் படையினர் கண்மூடித்தனமாகச் சுடுகின்றனர். பின்வாங்குவது தவிர வேறு வழியில்லை. கிட்டு களநிலை பாதகத்தைக் கருத்திற் கொள்ளாது துணிந்து நின்று தாம் வைத்திருந்த பு 3 (G 3) துப்பாக்கியால் படைக் கவச வண்டியைச் சுடுகிறார். சிங்களப் படை செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகிறார் கிட்டு.
1983 ஏப்ரல் 07இல் தவிபு தாக்குதல் அணிக்கு இரண்டாவது பொறுப்பாளராகக் கிட்டு அமர்த்தப் பட்டார். 1983ஆம் ஆண்டு இறுதியில் பயிற்சிக்கென இந்தியா வந்தார்.
1984இல் பயிற்சியை முடித்துத் ஈழம் திரும்பிய கிட்டு, குருநகர் படைமுகாம் தாக்குதல் உட்படப் பல தாக்குதல்களில் முதன்மைப் பங்கு வகித்தார்.
1985 சனவரி 09இல் தளபதி கேப்டன் பண்டிதர் வீரச் சாவடைந்தார். அவர் இடத்திற்குக் கிட்டு அமர்த்தப்பட்டார். கிட்டு யாழ் மாவட்டத் தளபதியானவுடன் யாழ் காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி அங்கிருந்த பெருந்தொகையையும் படைக் கருவிகளையும் கைப்பற்றினார். யாழ் மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றித் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப் படை யாழ் மண்ணில் அதன் முகாமுக்குள்ளே முடக்கப்பட்டது.
கிட்டுவின் பெயரைக் கேட்டாலே சிங்களப் படை கதிகலங்கிப் போகும். தமிழீழம் முழுவதும் கிட்டுவின் புகழ் பரவியது. மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் கிட்டு அக்கறை காட்டினார். நூலகம், தொழில் நிலையங்கள் மலிவு விலைக் கடைகள் எனப் பலவற்றை மக்களின் நலன் கருதி நிறுவினார். அவரின் சமூகப் பணிகள் இவ்வாறு விரிவடைந்து கொண்டேயிருந்தன.
1987 மார்ச்சு இறுதியில் துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலில் தமது காலை இழந்தார் கிட்டு. ஆனால் மன உறுதியை இழக்கவில்லை. மருத்துவத் திற்காக இந்தியா வந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதாமைகளை இந்தியாவில் இருந்தபடியே எழுதி வெளியிட்டார். இதனால் இந்திய அரசு அவரை வீட்டுக் காவலிலும் பின்பு சென்னை நடுவண் சிறையிலும் அடைத்தது. சிறையில் இருந்தபடியே ‘தேவி’ இதழுக்குப் போராட்டம் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். தம்மை விடுவிக்குமாறு சிறைக்குள் பல அறப் போராட்டங்களை நடத்தினார். இறுதியில் இந்திய அரசு அவரை விடுதலை செய்து தமிழீழத்துக்கு அனுப்பி வைத்தது.
1989ஆம் ஆண்டு சிங்கள அரசுடன் பேச கொழும்பு சென்ற குழுவில் கிட்டுவும் இடம் பெற்றார். அவ்வாண்டே அவர் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு இலண்டனுக்குப் பயண மானார். புலம் பெயர் தமிழர்களுக்குப் போராட்ட உணர்வையும், நம்பிக்கை யையும் ஊட்டினார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகள் கலைப் பண்பாட்டுக் கழகம் எனப் பல்வேறு அமைப்புகளை வெளிநாடுகளில் அமைத்துச் செயல்பட்டார். ஈழ மண்ணைக் கிட்டு மிகவும் நேசித்தார். விரைந்து தாயகம் திரும்பவே விரும்பினார்.
1993 சனவரி 7இல் கிட்டுவும் 9 வீரர்களும் எம்.வி. யகதா என்ற கப்பல் மூலம் இந்தோனேசியாவிலிருந்து தமிழீழம் நோக்கிப் புறப்பட்டனர். 1993 சனவரி 13இல் இந்தியக் கடல் எல்லைக்கு அருகில் உள்ள பன்னாட்டுக் கடற்பரப்பை வந்தடைந்தனர். இவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்த இந்தியக் கடற்படை அவர்களை மறித்துச் சரணடையும் படி எச்சரித்தது. 16ஆம் நாள் காலை 6 மணி வரை கெடு விதிப்பதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும், இல்லையயனில் அதிரடிப் படை அவர்களைத் தாக்கிச் சிறை பிடிக்கும் என்றும் எச்சரித்தனர்.
16 காலை சரியாக 6 மணிக்கு இரண்டு உலங்கு வானூர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிடுகின்றன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்க அணியமாகிறார். 1993 சனவரி 16 காலை 6.30 மணிக்கு இந்தியக் கப்பற்படை பீரங்கிக் குண்டுகளால் கிட்டுவின் கப்பலைத் தாக்குகிறது. சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்பிக்கச் சொல்கிறார் கிட்டு.
கேணல் கிட்டுவுடன் லெப்ரினன்ட் கேணல் குட்டிசிறி, லெப்ரினன் கேணல் மலரவன், கடற்புலிகளான கப்டன் குணசீலன், கப்டன் ஜீவா, லெப்ரினன்ட் தூயவன், லெப்ரினன்ட் நல்லவன், லெப்ரினன்ட் அமுதன் ஆகியோர் வீரச் சாவைத் தழுவிக் கொள்கின்றனர்.
*கிட்டு ஒரு தனி மனித வரலாறு,
நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்
ஈழ விடுதலை வரலாற்றின்
ஒரு காலப் பதிவு*