கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருப்பது சரணடைந்த போராளிகளின் சடல எச்சங்களே!

You are currently viewing கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருப்பது சரணடைந்த போராளிகளின் சடல எச்சங்களே!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருப்பது, 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகளின் மனித எச்சங்களே என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்படுகின்ற உடைகள், கண்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தியிருக்கலாமெனச் சந்தேகிக்கக்கூடிய துணிகள், துப்பாக்கிச் சன்னங்கள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் அதையே உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இரண்டாம்நாள் அகழ்வாய்வுகளை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது, துப்பாக்கிச் சன்னங்கள், துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த பெண்களுடைய ஆடைகள், கண்களுக்கு கட்டுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கக்கூடிய வகையிலான துணி, என்பன தடயப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், மனித எச்சங்களும் பகுதியளவில் மீட்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இங்கு இன்னும் பல மனித எச்சங்கள் இனங்காணப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பே காணப்படுகின்றது.

இவற்றையெல்லாம் அவதானிக்கும்போது, கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகளை இங்கு கொண்டுவந்து கண்களைக் கட்டி, சித்திரவதைக்குட்படுத்தி, துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்து இங்கு புதைத்துள்ளார்கள் என்பதே எனது நிலைப்பாடாகவிருக்கின்றது.

மேலும் கடந்த ஜூலைமாதம் 06ஆம் திகதி இந்தப் பகுதியில் முதற்கட்ட அகழ்வுப்பணிகள் மேற்கெள்ளப்பட்டபோது, இந்த இடங்களில் புலனாய்வாளர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள் என எம்மால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந் நிலையில் கடந்த வியாழனன்று இங்கு முதல்நாள் அகழ்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டதன் பிற்பாடு, மனிதப் புதைகுழி வளாகம் பொலிசாரின் பாதுகாப்பிலிருந்தபோது புலனாய்வாளர்கள் உள்நுழைந்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். எனவே இங்கு பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் என்ன பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

எனவேதான் நாம் இந்த அகழ்வுப்பணிகளில் சர்வதேச கண்காணிப்பைத் தொடர்ந்து கோரிவருகின்றோம்.

இவ்வாறு புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு இருந்தமையினால்தான், இரண்டாவதுநாள் அகழ்வுப் பணிகளில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி முழுமையான அவதானத்தைச் செலுத்தியிருந்தமை அவதானிக்க முடிந்தது. அந்தவகையில் நாம் நீதிமன்றை முழுமையாக நம்புகின்றோம்.

எனினும் குருந்தூர்மலை விவகாரத்தில் மூன்றுமுறை நீதிமன்றக் கட்டளையை மீறிய தொல்லியல் துறையினர் மீது எமக்கு அதிருப்தியிருக்கின்றது.

ஆகையினாலேயே யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் துறையினரை இந்த அகழ்வுப் பணிகளில் இணைத்துக்கொள்ளுமாறு கூறுகின்றோம். இந் நிலையில் தமிழ் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஸ்பரட்ணம் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் பங்கேற்பார் எனவும் அறியக்கூடியவாறுள்ளது.

மேலும் இந்த மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைத்தன்மைகள் வெளிப்படுத்தவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments